திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 13, 2020: கிராமங்களிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையும், விவசாயத்தையும் நம்பியிருப்பதால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் தற்சார்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கான ஈ-கோபாலா செயலி மற்றும் இதர திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் தற்சார்பு இந்தியாவின் தூண்களாக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டில், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், வேளாண் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது முடக்கத்தின் காரணமாக வேலைகளை இழந்து மற்ற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட 1.39 லட்சம் நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூபாய் 300 கோடி மதிப்பிலான கொவிட் நிதியுதவி தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூபாய் 9.92 கோடி மதிப்புடைய கொவிட் நிதியுதவி தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்க திட்டத்தால் செயல்படுத்தப்படும் இந்த தொகுப்பின் மூலம் 4,500 பேர் பயனடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், முசிறி, மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூர் மற்றும் துறையூர் ஒன்றியங்களில் உள்ள 135 கிராம பஞ்சாயத்துக்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூபாய் 7 லட்சம் மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்படுகிறது. மேலும், கொவிட் நிதியுதவி தொகுப்பின் கீழ், 7 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூபாய் 1.5 லட்சம் வழங்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் உற்பத்தி குழுக்களுக்கான ஒருமுறை மூலதன நிதி உதவி ஆன இதன் மூலம் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒன்றரை லட்சம் வழங்கப்படும். திருச்சிராப்பள்ளியில், இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், 1995 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 50,000 என மொத்தம் ரூபாய் 5.4 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. அதோடு, 1900 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கடன் தொகை என மொத்தம் ரூபாய் 1.69 கோடி வழங்கப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வேலைகளை இழந்து வெளி மாநிலங்களில் இருந்து பல பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றால் வேலைகளை இழந்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பியுள்ள 88 இளைஞர்களுக்கு இந்த தொகுப்பின் கீழ் தலா ரூபாய் ஒரு லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. சில்லரை மளிகை கடை, சில்லரை காய்கறி கடை, தேனீர் கடை, சிறு உணவகங்கள், அடுமனைகள், பால் பொருட்கள், ஆடு, கோழி, இறைச்சிக் கடைகள், பன்றி மற்றும் மீன் தொழில்கள், தையலகங்கள் ஆகியவற்றைத் தொடங்குவதற்காக சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மூன்று மாத கடன் தடை காலத்தையும் சேர்த்து அதிகபட்சம் 39 மாதத் தவணைகளில் இந்த தொகையை சுய உதவி குழுக்களிடம் தொழில் முனைவோர் திரும்ப செலுத்த வேண்டும். இரண்டு மாத கூடுதல் கருணை காலத்துக்குள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புக்கு இந்த தொகையை சுய உதவி குழு திரும்பச் செலுத்த வேண்டும். ஆக, மொத்த திரும்ப செலுத்தும் காலம் 41 மாதங்கள் ஆகும். பொது முடக்க தளர்வுகள் 4 காலகட்டம், பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்கான காலமாகும். நெருக்கடியில் இருந்து பொருளாதாரம் மீள்வதற்கு அரசு உதவுகிறது.