மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா தெரிவித்தார்.மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இது தவிர காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போதே கூட்டணி குறித்த பேச்சை தொடங்கிவிட்டன. இந்த சூழலில் நார்த்24 பர்கானா மாவட்டத்தில் “இனிமேல் யாருக்கும் அநீதியில்லை” என்ற பெயரில் பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் விஜய்வர்க்கியா நேற்றுப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அகதிகள் மீது கருணை கொள்ள மறுக்கிறது. ஆனால் மாநிலத்தில் இருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பாஜகவும், மத்திய அரசும் தீவிரமாக இருக்கின்றன.
ஆதலால்,அகதிகளுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் 2021ம் ஆண்டு ஜனவரியில் அமலாகும் என நினைக்கிறேன். அண்டை நாடுகளில் இருந்து வந்துள்ள மக்களைக் காக்கும் நோக்கில் அவர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நேர்மையான நோக்கில் கொண்டு வந்துள்ளது” எனத் தெரிவித்தார். விஜய் வர்க்கியாவின் பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பர்ஹத் ஹக்கிம் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “மேற்கு வங்க மாநில மக்களை முட்டாளக்க பாஜக முயற்சித்து வருகிறது. குடியுரிமை என்றால் என்ன என பாஜக நினைக்கிறது. மத்துவா சமூகத்தினர் குடியுரிமை பெறாவிட்டால் எவ்வாறு அவர்கள் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும். மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். மத்துவா சமூகத்தினர் கிழக்கு பாகிஸ்தான் தற்போது வங்கதேசத்திலிருந்து கடந்த 1950-களில் புலம்பெயர்ந்து வந்தவர்கள். பெரும்பாலும் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் அங்கிருந்து மேற்கு வங்கத்தில் புலம் பெயர்ந்தனர். மே.வங்கத்தில் மத்துவா சமூகத்தினர் ஏறக்குறைய 30 லட்சம் பேர் இருக்கின்றனர். குறிப்பாக நாடியா, வடக்கு, தெற்கு பர்கானா மாவட்டங்களில் 30 முதல் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்துவா சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.