இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் 11.12.2019 புதன் கிழமை அன்று முன்னாள் எம்.எல்.ஏ.
கோ.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி, வை.சிவபுண்ணியம், பி.பத்மாவதி, தி.ராமசாமி மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் வி.அழகர்சாமி, பொ.லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் முறையில் அதனை மகத்தான வெற்றி பெறச் செய்வது, கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து கூட்டணித் தலைமையோடு பேசி இறுதிப்படுத்தி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்க்கும் வகையில், பாஜக மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டமசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து வெளியேறி வருவோரில் இஸ்லாமியர் தவிர பிறரை மத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் குடிமக்களாக ஏற்பதற்கு சட்டதிருத்தம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் அரசியல் அமைப்பு சட்டத்தின் சாரமாக உள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு பா.ஜ.க. மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. இதனால் நாட்டின் இயல்பு நிலைக்கு ஏற்படும் பேரபாயம் குறித்து அறிவுத்துறையினர் ஆட்சிப் பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அலுவலர்கள் விரிவாக எடுத்துக்கூறி எச்சரித்துள்ளனர். ‘இந்துராஷ்டிரா’ கட்டமைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ். பாஜக தலைவர்கள் பேசி வரும் சூழலில் இஸ்லாமிய சமூகம் பாதுகாப்பாற்ற நிலைக்கு தள்ளப்படுவது சட்டரீதியாக்கப்படுகிறதோ? என்ற ஆழமான சந்தேகத்தை குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஏற்படுத்தியுள்ளது. மதரீதியாக மக்களை பிளவு படுத்தி, சமூக மோதலை உருவாக்கி, இஸ்லாமியர் களை குறிவைத்து தாக்கும் தீய நோக்கம் கொண்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை அஇஅதிமுக ஆதரித்திருப்பது தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் தமிழர்களின் தொன்மை மரபுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும். வெறுப்பரசியலின் விஷ விதையான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை உடன் திரும்பப் பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் மத்திய அரசை வலியுறுத்தி 14.12.2019 சனிக்கிழமை தமிழ்நாட்டின் மாநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
உணவு பண்டத்தில் இன்றியமையாப் பொருள்களான வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலைகளும், பயிறு வகைகளின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கட்டுபாடில்லாமல் உயர்ந்து வரும் விலை உயர்வைக் கட்டுப் படுத்தவும், தேவையான உணவுப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி நிலவரத்தை கட்டுக்குள் வைக்கும் எந்த நடவடிக் கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் நியாய விலைக் கடைகள் மூலம் நியாயவிலையில் உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் முத்தரசன் கூறியுள்ளார்.