சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 07.10.2020 அன்று காலை, S-13 குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான காவல் குழுவினர் குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே தாம்பரம் செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, அதில் வந்த 3 நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களது இருசக்கர வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 1.சரவணன், வ/32, த/பெ.மூர்த்தி, எண்.19099, பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 2.முத்துலிங்கம் (எ) கவி, வ/28, த/பெ.அரசு, எண்.3, நேதாஜி தெரு, மாணிக்கபுரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம், 3.பாஸ்கர், வ/21, த/பெ.சீனிவாசன், எண்.1/36, இந்திரா காந்தி தெரு, மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மேற்படி 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் குற்றவாளி சரவணன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், முத்துலிங்கம் (எ) கவி மீது இருசக்கர வாகன திருட்டு, வீடு புகுந்து திருடுதல் உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.