குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

கொவிட்-19க்கு எதிரான தன்னுடைய போரில் மற்றுமொரு மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. 7.94 சதவீதமாக தற்போது உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, குறைந்த அளவிலான புதிய பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது. நாடு முழுவதும் விரிவான முறையில் பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இதுவரை செய்யப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 9.5 கோடியை இன்று கடந்தது. அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தினசரி சராசரி தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 6.13 சதவீதமாக உள்ளது. பரிசோதனை, கண்காணிப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அரசு பின்பற்றும் யுக்தியின் மூலம் பாதிப்புகளில் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய பாதிப்புகள் எண்ணிக்கை 7,72,055 ஆகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது தற்போதைய பாதிப்புகளின் விகிதம் வெறும் 10.24 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,399 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 66 லட்சத்துக்கும் (66,63,608)அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,722 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய குணமடைதல் விகிதம் 88.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.