குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த தொழில் பயிற்சியுடன் பணியில் அமர்த்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர் (தெற்கு) ஆர்.தினகரன் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) ஏ.ஜி.பாபு, கண்காணிப்பில், புனித தோமையர் மலை காவல் துணை ஆணையாளர் K.பிரபாகர் தலைமையில் புனித தோமையர்மலை காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட இளஞ் சிறார்களுக்கான மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் 12.10.2020 அன்று தமிழக அரசு பயிற்சி துறை மூலம் கிண்டியில் நடத்தப்பட்டது. இம்முகாம் 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

12.10.2020 அன்று இம்முகாமில், புனித தோமையர்மலை காவல் மாவட்டத்தில் குற்றங்களில் கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு குனநல மாற்றத்திற்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு. தீய வழியில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அவர்களின் நல்ல எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் வகையில் அவர்களுக்கு விருப்பமான, ஏசி மெக்கானிக், டெய்லரிங், செல்போன் பழுதுபார்த்தல் போன்ற சிறு தொழில் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடித்த சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இளஞ்சிறார்களுக்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், ஏதேனும் புகார்கள் அல்லது உதவிகள் தேவைப்படுமெனில் காவல்துறையை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.