இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு குழந்தைகளின் நலனுக்காக பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 14) முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடை பெறவுள்ளது. இதன் மூலம் ஒரு வயது முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பன்டசோல் மாத்திரை (குடற்புழு நீக்க மாத்திரை) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 349572 குழந்தைகளுக்கு வழங்கிட
திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத்திரை வழங்குவதன் மூலம்; இரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது. மேலும் குடற்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாந்தி சோர்வு மற்றும் படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடிகளிலும் வழங்கப்படும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 5181 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4824 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பு+ரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 244 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் அந்த வகையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். அத்தியாவசிய தேவைகள் தவிர வெளி பயணங்களை தவிர்த்திட வேண்டும். வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திட வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல் கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றிட வேண்டும். சத்தான உணவு வகைகள் உட்கொள்ளுதல் வெந்நீர் பருகுதல் உப்பு கலந்த நீரால் வாயினை சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து வார விழா -போஷன் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டார். மேலும் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் ஊரகப் பகுதிகளில் களப்பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக ஆக்ஸிஜன் அளவீட்டுக்கருவி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடத்தில் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.
இந்த நிகழ்வின்போது மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.அ.சகாய ஸ்டீபன்ராஜ் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மருஎம்.செந்தில்குமார் (இராமநாதபுரம்) மரு.பி.இந்திரா (பரமக்குடி) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வ.ஜெயந்தி உட்பட அரசு அலுவலர்கள்
பலர் உடனிருந்தனர்.