கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஒரு வார பயணமாக இந்தியா வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ராபர்ட் கிபோச்சி 2020 நவம்பர் 2 முதல் 6 வரை ஒரு வார பயணமாக இந்தியா வருகிறார். இந்த வருடம் மே மாதம் கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றதற்குப் பின் ஜெனரல் ராபர்ட் கிபோச்சி ஆப்பிரிக்காவுக்கு வெளியே பயணம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா ஆகும். பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதிகள், மற்றும் புது தில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை தனது ஒருவார இந்திய பயணத்தின் போது கென்ய படைகளின் தலைமை தளபதி சந்திக்கிறார். ஆக்ரா, மாவ், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் ஜெனரல் ராபர்ட் கிபோச்சி பயணம் மேற்கொள்கிறார். 1984-87 கால கட்டத்தில் இளம் ராணுவ அதிகாரியாக இருந்தபோது, மாவில் உள்ள ராணுவ தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் ஜெனரல் ராபர்ட் கிபோச்சி பொறியியல் படிப்பு பயின்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் வலுவடையும் நேரத்தில் அந்நாட்டின் ராணுவப் படைகளின் தலைமை தளபதி இந்தியாவுக்கு வருகை புரிவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.