1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலிக்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்ற வாளிகள் இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி சனல் குமார் உத்தர விட்டார்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் என்ற கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியாக இருந்தார். கன்னியாஸ்திரி அபயா 1992-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி கான்வென்ட்டில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தனர். ஆனால், அபயாவின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து, தங்கள் மகள் அபயா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டதாக சந்தேகிப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரினர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் அபயா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவந்தது. அபயா கொலை தொடர்பாக பாதிரியார்கள் தாமஸ் கூட்டூர், புத்ருக்காயல் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னியாஸ்திரி செபியும், பாதிரியார் தாமஸும் நெருக்கமாக இருந்த காட்சியை அபயா பார்த்துவிட்டதால், அவரைக் கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது கொலை வழக்கு, குற்றச் சதி, ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பாதிரியார் புத்ருக்காயலுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு அவரை விடுவித்தது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.சனல் குமார் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், பாதிரியார் தாமஸ் கூட்டுர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்கள் புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சிபிஐ நீதிபதி சனல் குமார் இன்று தண்டனை விவரத்தை அறிவித்தார். அபயா கொலை வழக்கில் குற்றவாளிகளான பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு வாழ்நாள் சிறையும், ஆதாரங்களை அழித்த குற்றத்துக்கு இருவருக்கும் ஆயுள் சிறையும் என இரட்டை ஆயுள் சிறை விதிக்கப்பட்டது. இந்த இரு ஆயுள் சிறையையும் ஏககாலத்தில் இருவரும் அனுபவிக்க வேண்டும். இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பில் தெரிவித்தார்.