கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரொனா மரணம் என்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஶ்ரீராஜலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில் கூறியிருப்பதாவது; “தமிழ்நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா உயிரிழப்பால் தாய் தந்தையரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய−மாநில அரசுகள் முறையே ரூ.பத்து லட்சம் மற்றும் ரூ.ஐந்து லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு கொரொனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.ஐந்து லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.இந்த இழப்பீட்டு தொகைகளை பெறுவதற்கு உயிரிழந்தவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் அவர்கள் கொரொனாவினால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ்களில் நுரையீரல் பிரச்சனை−சுவாச கோளாறு போன்ற இணை நோய்களால் உயிரிழந்ததாகவே பெரும்பாலும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது”. உதாரணமாக “சேலம் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கொரொனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபோது நாமக்கல் அரசு மருத்துவமனை இணைநோயால் உயிரிழந்ததாகவே இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது” எனவே கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க உரிய நெறிமுறைகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி− செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் துவக்கத்திலேயே இவ் வழக்கு முக்கியமான வழக்கு என்று கருத்து கூறிய தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இறப்பு சான்றிதழை தமிழக அரசு இவ்வாறு தவறாக அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் இவ்வாறு தவறாக இறப்பு சான்றிதழ்களை வழங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசால் வழங்கப்படும் நிவாரண தொகையை எவ்வாறு பெற இயலும்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்: மேலும் கொரொனா இறப்பு சம்மந்தமாக இதுவரை தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து இறப்பு சான்றிழ்களையும் ஆய்வு செய்து தமிழக அரசு அடுத்த விசாரணை தினத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக வல்லுனர் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மறு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.