கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கை அரசு விலக்கினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இங்கு மட்டும் அதை நீட்டிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் தொற்று பரவுவது குறைந்து வந்தாலும், கோவையில் தினமும் மூன்றாயிரத்துக்கும் அதிகமானவர்கள், தொற்றினால் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. கோவையில் இரண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் 20 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 22 ஆய்வகங்களில் தினமும் 17 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் அளவுக்கு அதிகபட்ச திறன் உள்ளது.  ஆனாலும் தினமும் மாவட்டத்தில், 12 ஆயிரத்துக்கும் குறைவான அளவிலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. எடுக்கப்படும் பரிசோதனையில், 30 சதவீதம் அளவுக்கு தினமும் பாதிப்பு உள்ளது. உதாரணமாக, ஜூன் முதல் தேதி, 11 ஆயிரத்து 601 கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில், 3,332 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் சில தனியார் ஆய்வகங்கள் வேண்டுமென்றே, ‘பாசிட்டிவ்’ எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காண்பிப்பதாக இன்னும் புகார்கள் தொடர்கின்றன. இதை ஆய்வு செய்வது அவசியம். மாவட்டத்தில் தற்போது சராசரியாக, 40 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 10 ஆயிரம் பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தொற்று பாதித்தவர்களில், 28 ஆயிரம் பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  மீதமுள்ள, 12 ஆயிரம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பில், 56 சதவீதம் பேர், கோவை மாநகராட்சிப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.  அதற்கு அடுத்ததாக சூலுார், துடியலுார், மதுக்கரை மற்றும் தொண்டாமுத்துார் என நகரையொட்டிய பகுதிகளில்தான் தொற்று பாதித்தவர்களில், 25 சதவீதம் பேர் உள்ளனர். மீதமுள்ள 19 சதவீதம் பேர்தான், மாவட்டத்தின் மற்ற பகுதிகள் அனைத்திலும் பரவலாகவுள்ளனர். கேரளாவிலிருந்து பல்வேறு வழிகளிலும் கோவைக்கு இன்று வரை பலரும் வந்து செல்வதாலும் தொற்று அதிகரிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. கோவையில் வங்கிகள், ரயில்வே மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பலர், தினமும் கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் வந்து செல்வது வழக்கமாக இருப்பதாக எல்லையில் வசிக்கும் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். இவை அனைத்தையும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை விலக்கினாலும் அல்லது தளர்த்தினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு தொற்று பாதிப்பு 500 க்கும் குறைவாகும் வரை, இதை நீட்டிக்க வேண்டியது அவசியம்.