கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  ​​கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு கடந்த 10.5.2021 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்து நடைபெற்று வந்த நிலையில், 24.5.2021 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக காவல் சோதனைச் சாவடிகள் மற்றும் தடுப்புகள் அமைத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணி மற்றும் முன்கள பணியாளர்கள் வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட இ-பதிவு செய்தவர்கள்,  மருத்துவம் மற்றும் இறப்பு உள்ளிட்ட காரணத்திற்காக செல்பவர்களை தவிர்த்து, எவ்வித காரணமும் இன்றி,விதிமுறைகளை மீறி செல்பவர்களை நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பராமரிக்காமல் இருந்து வரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (29.5.2021) காலை, சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ, அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ (புளூ ஸ்டார்) சந்திப்பு மற்றும் கொரட்டூர் பாடி சரவணா ஸ்டோர் அருகில் உள்ள வாகன சோதனை சாவடிகளுக்கு சென்று காவல்குழுவினரின் வாகனத் தணிக்கை பணியினை பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்ட  உரிய வழிகாட்டுதல்படி வாகன தணிக்கைகள்  நடைபெறுகிறதா எனவும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு)திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) திருமதி.எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.ஜி.ஜவஹர், இ.கா.ப., (அண்ணாநகர்), திரு.ஜே.மகேஷ், இ.கா.ப., (அம்பத்தூர்), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடனிருந்தனர்.