கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்திருந்த நிலையில், கட்டுமானத் தொழில் மட்டுமே மக்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது. இந்த சூழலில் கட்டுமான பொருட்களின் 20 சதவீத விலை உயர்வால் கட்டுமானத்துறையே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் சிமெண்ட் விலை 350 ரூபாயாக இருந்தது. எம் சாண்ட் பருமன் அடி அளவில் 58 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை 65 முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை சென்றுள்ளது. கட்டுமானக் கம்பி டன் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் உயர்ந்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் கம்பி 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது. மணல் யூனிட் ஒன்று 5,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் பழைய விலை 3,800 ரூபாயாக இருந்தது. ஜல்லி யூனிட் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக விலை ஏற்றம் கண்டுள்ளது. இவை மட்டுமின்றி செங்கல், மரக்கட்டை உள்ளிட்ட கட்டுமானம் சார்ந்த அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதுதவிர பெயின்ட், எலக்டிரானிக் ஹார்ட்வேர் பொருட்களின் விலையும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வின் காரணமாக கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஒப்புக்கொண்ட விலையில் வீடுகளைக் கட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த கட்டிடப்பணிகள் முடங்கிப் போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களுக்கான உற்பத்தி செலவுகள் அதிகரிக்காத போதும், கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாறு விலைகளை ஏற்றியுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், வீடுகளை கட்டித்தரும் கட்டுமான நிறுவனங்களின் செலவு குறுகிய காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களிடமே கூடுதலாக வசூலிக்க வேண்டியுள்ளதால் சாமானிய மக்களின் வீடு வாங்கும் கனவு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் கட்டுமானப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதபோது தமிழகத்தில் மட்டுமே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக அங்கு தமிழகத்தை விடவும் கட்டுமானப் பொருட்களின் விலை குறைவாகவே உள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று  முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பை சாமானியர்களின் தலைமீது உற்பத்தி நிறுவனங்கள் சுமத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை  நெறிப்படுத்த தனியொரு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.