கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் வயதினர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என, தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம், ‘கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றால், உடன் பெற்றோரும் செல்ல வேண்டி இருக்கும். அதனால், தடுப்பூசியை இந்தப் பிரிவு மக்களுக்கு வேகமாக செலுத்த வேண்டும். 3வது அலை வந்தால், அதை எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள். மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது’ எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், ‘நாட்டில் கொரோனா 3வது அலை, குழந்தைகளை தீவிரமாகத் தாக்கும் என்பதற்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதனால், கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.