கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ இன்று வெளியிட்டார். முக்கிய மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் குணங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக “20201-ம் ஆண்டில் கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள்” எனும் தலைப்பிலான இந்த மின்-புத்தகத்தை தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் தயாரித்துள்ளது. காய்ச்சல், இருமல், சளி, உடல் பலவீனம் மற்றும் வலி ஆகியவற்றுக்காக இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளை பயன்படுத்தலாம். அவற்றின் உயிரியல் பெயர்கள், உள்ளுர் பெயர்கள், அவற்றில் உள்ள ரசாயன பொருட்கள், மருத்துவ குணங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த மின்-புத்தகம் பதிவு செய்துள்லது. இதன் மூலம் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் வகைகள் குறித்த விழிப்புணர்வும், அறிவும் மக்களுக்கு கிடைப்பதோடு, கொவிட்-19 தடுப்பு, மேலாண்மை மற்றும் பராமரிப்பில் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். புத்தகத்தை வெளியிட்டு பேசிய திரு கிரண் ரிஜிஜூ, மருத்துவ தாவரங்களை நாடு முழுவதும் விளைவிக்கவும், பாதுகாக்கவும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய ஆயுஷ் செயலாளர் மருத்துவர் திரு ராஜேஷ் கொட்டேச்சா, மருத்துவ தாவரங்களின் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் செய்து வரும் பணிகளை பாராட்டினார். மூலிகை மருந்துகளின் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் ஜே எல் என் சாஸ்திரி வலியுறுத்தினார்.