பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்து, அவசரச் சூழலுக்குப் பயன்படுத்தத்தான், அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறு வனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட் டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன. ஆனால், இரு நிறு வனங்களும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடிக்காத நிலையில் அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:
”பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்ஸின், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது அவசரச் சூழலுக்குத்தான். அவசரப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள அல்ல. இந்த மருந்து நிறுவனத்திடம் இருந்து இன்னும் ஏராளமான புள்ளிவிவரங்கள் வர வேண்டியது இருக்கிறது. அதற்கு அனுமதி பெற வேண்டியதுள்ளது. உலகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவசரமான சூழலை எதிர்கொள்ள, அவசரமான ஒப்புதல் இரு மருந்து நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளது. நம்மிடம் திறன்மிக்க ஆன்டிவைரல் மருந்து இல்லை. இருக்கின்ற மருந்துகளையும் வைத்துக்கொண்டு நாம் கண்டிப்பாக விழிப்புடன் செயல்பட வேண்டும். திடீரென கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கும் சூழல் உருவானால், அந்த அவசரச் சூழலை எதிர்கொள்ள அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அந்த அவசரச் சூழலின்போது பாரத் பயோடெக் நிறுவன தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் சீரம் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து எந்த அளவுக்கு வீரியமாகச் செயல்படும் எனத் தெரியாத சூழல் இருக்கிறது. அதனால்தான், 2-வது மருந்தாக பாரத் பயோடெக் மருந்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸை மனதில் வைத்துத்தான் அவசரச் சூழலுக்குத்தான் இரு நிறுவனங்களுக்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் இரு மருந்து நிறுவனங்களும் தொடர்ந்து தங்களின் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையைத் தொடர்ந்து நடத்தி, அதிகமான புள்ளிவிவரங்களைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ் மருந்துகள் இருப்பு இருக்கின்றன. இவற்றை 3 கோடி மக்களுக்குச் செலுத்த முடியும். அதேநேரத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் புள்ளி விவரங்களும் இருக்கின்றன. இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எந்தச் சூழலையும் நாம் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறோம் என்பதுதான். பிரிட்டனில் அதிகமான கரோனா நோயாளிகள் நாள்தோறும் உருவாகிறார்கள், உயிரிழக்கிறார்கள். இந்தியாவின் கவலை என்னவென்றால் கடந்த 10 மாதங்களாகப் போராடி கரோனா பாதிப்பையும், உயிரிழப்பையும் குறைத்துள்ளோம். அது மாறிவிடக்கூடாது. பிரிட்டனில் கரோனா அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் மக்களுக்கு 2-வது டோஸ் மருந்து செலுத்தும் இடைவெளியை அதிகப்படுத்தியதுதான். முதல் டோஸ் தடுப்பூசி போட்டபின் அடுத்த 28 நாட்களில் 2-வது டோஸ் மருந்து செலுத்தலாம். ஆனால், இந்தக் காலகட்டத்தை 12 வாரங்களாக நீட்டித்துள்ளது பிரிட்டன். இது உருமாறிய கரோனா பரவல் அதிகரிக்க முக்கியக் காரணம்”. இவ்வாறு ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.