சமூகநீதியை சிதைத்து குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை – ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை புறக்கணித்துள்ளது. இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் அநேக மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள இச்சூழலில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநில அரசுகளின் கல்வித்துறை செயலாளர்களை அழைத்து ஆலோசனை செய்ய மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வந்த பிறகு அந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது புதிய கல்விக் கொள்கை தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை அழைக்காமல் அரசு அதிகாரிகளை மட்டும் அழைத்து தங்களின் கருத்துக்களைத் திணித்து முடிவுகளை எடுக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த போக்கு கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைக்கும் நடவடிக்கையாகவே உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள மக்களின் சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பையும், அதிகாரத்தையும் அரசியல் சாசன சட்டத்தின் வழியே பெற்றுள்ளன. அவ்வகையில் மாநில அரசுகள் தம் மாநில மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் அதனை உருவாக்கும் வகையிலும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது அந்த அதிகாரங்களைச் சிதைக்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருவது வேதனையளிக்கிறது.

மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை பல்வேறு வகையான நெருக்கடிகளை மாநில அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு உருவாக்கும் வணிக வளாகங்களாகக் கல்வி நிறுவனங்கள் மாற இந்தக் கல்விக் கொள்கை வழி வகை செய்யும். பள்ளிக்கு வரும் குழந்தைகளை உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றார் போல் வேலைத் திறன்களை (லிஷீநீணீறீ ஷிளீவீறீறீ ழிமீமீபீs) வளர்த்துக்கொள்ளச் சொல்கிறது. குழந்தைகளைக் குழந்தை தொழிலாளியாக மாற்ற இந்த புதிய கல்விக்கொள்கை வழிவகை செய்கிறது. சமூகநீதியை முற்றாக சிதைக்கிறது. இதையும் தாண்டி ஒரு மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தால் அந்த படிப்பு கல்லூரிக்குச் சேர தகுதி இல்லை என்று அறிவிக்கின்றது, அதன் பின் அகில இந்திய அளவில் நடத்தப்படும் திறனையும் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து கல்லூரிக்குச் சேர்க்கைக்குத் தகுதி கொள்ளப்படும் என இந்த கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த கல்விக் கொள்கை என்பது முற்றிலும் குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதியவகை திட்டமாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. சமூகநீதி அடிப்படையில் இந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகின்றது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசு அதிகாரிகளை வைத்து நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கு கொள்ளக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி