‘ஆன்மீக நம்பிக்கை’ கொண்ட மக்களை மத அடிப்படைவாத நிலைக்கு நெட்டித்தள்ளி, மதவெறியூட்டி, தமிழகத்தை வன்முறைகளமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் வெறுப்பு அரசியல் சக்திகளின் சதிச்செயல்கள் குற்றச் செயல்களாக வெளிப்பட்டு வருகின்றன. அண்மையில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் வெளியான ‘கந்தர் சஷ்டி’ குறித்த பதிவு கடுமையான சர்ச்சை ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பகுத்தறிவுப் புரட்சியாளர் பெரியார் ஈ.வெ.ரா. சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் குறித்து ஆபாச அவதூறுகள் பரப்பப்படுகின்றன. எதிர்கட்சி தலைவர் மீது களங்கம் கற்பிக்கும் பதிவுகள் வெளியாகின்றன. இதன் தொடர்ச்சியாக கோவை மாநகரில் மூன்று இடங்களில் விநாயகர் கோயில்கள் சமூக விரோத சதிகாரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். ‘ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது, அந்நாட்டு மன்னர் பிடில் வாசித்த கொண்டிருந்தார்’ என்பது போல் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அரசு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
அறிவியல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பழக்க வழக்கங்களை ஆதரிப்பதில்லை; ஆன்மிகவாதிகளையும், கோயில்களையும் தாக்குவதையோ, தரம் தாழ்ந்து பேசுவதையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை. கோவை மாநகரில் விநாயகர் கோயில்களை சேதப்படுத்திய குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதில் தொடர்புள்ள குற்றவாளிகளை கண்டறிந்து, உடனடியாக கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். என்று இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.