சிங்கிள் ஷாட்டில் உருவான “யுத்த காண்டம்”: நொடிக்கு நொடி விறுவிறுப்புக்கு காத்திருக்க வேண்டுமாம்

தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டே  தான் இருக்கும். அந்த வரிசையில், இதோ மற்றுமொரு புதுமையுடன் ரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்த வரவிருக்கிறது  யுத்த காண்டம்.
இப்படத்தில், கன்னிமாடம் படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும் கோலி சோடா 2 படத்தின்  க்ருஷா குரூப் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய  வில்லனாக சுரேஷ் மேனனும் திருப்புமுனை கதாபாத்திரமாக போஸ் வெங்கட்டும் நடித்துள்ளனர். ஆனந்த்ராஜன் எழுதி  இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இனியன் ஜே.ஹேரிஸ் பணியாற்றியுள்ளார். படத்துக்கு கன்னிமாடம்  பட இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைத்திருக்கிறார். கன்னிமாடம் படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர்  இந்தப் படத்திலும் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இணை இயக்குநராக சுரேஷ் குமார்  பணியாற்றுகிறார். இயக்குநர் ஆனந்த் ராஜன், இயக்குநர் சமுத்திரகணியுடன் அசோஷியேட்டாகப் பணியாற்றியவர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூஸ் வடிவமைத்துள்ளார். கலை ராம்ஜி. படத்தை பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ  தயாரிக்கின்றனர். படத்தைப் பற்றி படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மனித வாழ்க்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும், பிரச்சினை என்றால் காவல்நிலையம் செல்வதும்  தவிர்க்க முடியாத ஒன்றே. அப்படித்தான், ஒரு விபத்தில் சிக்கும் நாயகனும், நாயகியும் மருத்துவமனைக்கு  செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை  யதார்த்தமாக சொல்லும் படம் தான் யுத்த காண்டம். யதார்த்த சினிமா என்றால் அது பெயரளவில் இல்லாமல் திரையில்
வெளிப்பட வேண்டும். அப்போதுதான் ஏன் சிங்கிள் ஷாட்டில் படத்தை இயக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.  சிங்கிள் ஷாட் என்றவுடன் இந்தக் கதையில் சிறப்பாக நடிக்க தியேட்டர் ஆர்டிஸ்ட்களுக்கே எளிதில் சாத்தியப்படும்  எனவும் தோன்றியது. அந்த நோக்கத்துடன் குழுவை தேர்வு செய்தோம். கன்னிமாடம் நடிகர் ஸ்ரீராம் கார்த்தி இதில்  அழகாகப் பொருந்துவார் எனத் தேர்வு செய்தோம். அவரைப் போலவே க்ருஷாவும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். யோக் ஜேபி
சார் ஒரு நடிப்புப் பள்ளியே நடத்துகிறார். அதனால் அவரும் இப்படத்தில் இயல்பாகப் பொருந்தினார். போஸ் வெங்கட்  சார் சிறந்த நடிகர். சுரேஷ் மேனன் சாரை அவருடைய தோற்றத்துக்காகவே தேர்வு செய்தோம். வசனங்களை போஸ்  வெங்கட் எழுதியுள்ளார். படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கதையின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும்
என்று தோன்ற வேண்டும் என்று நினைத்தோம். படத்தின் கதைதான் சிங்கிள் ஷாட்டில் படமாக்க தூண்டியது. இதற்காக,  50 நாட்கள் நாங்கள் ஒத்திகை செய்தோம். கிட்டத்தட்ட முழுபடப்பிடிப்பு போலவே ஒத்திகையும் நடந்தது.

படத்தில் பாடல், 2 சண்டைக் காட்சிகள் எல்லாம் உள்ளன. ஒரு முழு நீளப்படத்திற்கான பாடல், சண்டைக் காட்சிகள்,  உணர்வுப்பூர்வமான வசனங்கள், காட்சிகள் என எல்லா அம்சங்களுமே இதில் இருக்கிறது. சிங்கிள் ஷாட் படத்தில்  பாடல்கள், சண்டைக்காட்சிகள் பதிவு செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆனால், எந்த நெருடலுமே ஏற்படாத  வண்ணமே இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக கவனம் செலுத்தப்பட்ட படமென்பதால்  கதையின் என்டர்டெய்ன்மென்ட்டில் எந்த சமரசமும் இருக்காது. அந்த அளவுக்கு நேர்த்தியாக ஒரு நல்ல கமர்ஷியல்  படமாக இருக்கும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் ‘நான் மகான் அல்ல’ படம் போல் கமர்ஷியல் படமாக  இருக்கும். பல இடங்களில் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ள விதம் நிச்சயமாக ஆச்சர்யப்பட வைக்கும்.படம் ஆரம்பித்து  ஐந்து நிமிடங்களில் ரசிகர்கள் இதை சிங்கிள் ஷாட் படமென்பதை மறக்கும் அளவுக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படக்குழு தெரிவித்துள்ளது.

மக்கள் தொடர்பு: நிகில்.