சென்னை, குரோம்பேட்டை, 2வது தெரு, ஐஸ்வரியா நகர், எண்.5 என்ற முகவரியில் வசித்து வரும் சரவணன், வ/42, த/பெ.கிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த (19.11.2020) அன்று சரவணனை சில நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி அவரது காரிலேயே கடத்தி சென்றதாகவும், பணம் கொடுத்தால் தான் விடுவேன் என்று கூறியதால், சரவணன் பயந்து பணம் ரூ.10 லட்சம் கொடுத்து அவரது கார் மற்றும் காரில் உள்ள முக்கிய பத்திரங்களை மீட்டு வந்துள்ளதாகவும், S-12 சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
S-12 சிட்லபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தனசெல்வம் தலைமையில் காவல் குழுவினர் விசாரணை செய்ததில், அடையாளம் தெரியாத நபர்கள் சரவணனிடம், துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி, சரவணனின் காரிலேயே கடத்தி ஶ்ரீபெரும்புத்தூர் வரை சென்று, சரவணனை தாக்கி, கார் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால், சரவணன் தனது வீட்டிலிருந்து பணம் ரூ.10 லட்சம் கொண்டு போய்
கொடுத்தபின் கடத்தல் நபர்கள் கார் மற்றும் முக்கிய ஆவணங்களை விடுவித்தது தெரியவந்தது. காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகள் 1.ராஜா (எ) சீசிங்ராஜா, வ/46, த/பெ.நரசிம்மன், எண்.54, தாங்கல் கரை தெரு, ராமகிருஷ்ணபுரம், கிழக்கு தாம்பரம், 2.ஜெயராமன், வ/28, க/பெ.மகாலிங்கம், எண்.112, TFK தெரு, நந்தம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 துப்பாக்கி, 2 கார், 5 செல்போன்கள், 7கத்திகள் மற்றும் பணம் ரூ.42,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் ராஜா (எ) சீசிங்ராஜா என்ற வரலாற்று பதிவேடு குற்றவாளி மீது கொலை வழக்கு உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது தெரிய வந்தது. ஜெயராமன் மீது 1 கொலை வழக்கு S-12 சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உள்ளது. விசாரணைக்கு பின்னர், கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் 11.12.2020 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.