சென்னை, திருவொற்றியூர், சண்முகாபுரம், 4வது தெரு, எண்.8 என்ற முகவரியில் திலீப், வ/28, த/பெ.பக்சாரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 09.01.2021 அன்று மேற்படி கடையின் பூட்டை அடையாளம் தெரியாத நபர் உடைத்து கடையிலிருந்து 36 செல்போன்கள் திருடிக்கொண்டு தப்பிச்சென்றதாக மேற்படி கடையின் உரிமையாளர் திலீப் H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. H-8 திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.புவனேஷ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.M.R.மணிமாறன், தலைமைக் காவலர்கள்
C.B.ரமேஷ்பாபு, (த.கா.16935),T.சிவகுமார் (த.கா.16894) மற்றும்M.தேவசீலன், (த.கா.31250) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பாஸ்கர் (எ) பல்லு பாஸ்கர், வ/22, த/பெ.குமார், எண்.42, அண்ணா நகர், 5வது தெரு, கொருக்குப்பேட்டை, என்பவரை கைது செய்தனர். மேலும், இக்கொள்ளையில் தொடர்புடைய சங்கர் (எ) கௌரிசங்கர், அரவிந்தன் மற்றும் காளி (எ) கார்த்திக் ஆகிய 3 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட 4குற்றவாளிகளும், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
சென்னை, வடபழனி, குமரன் காலனி, 6வது தெரு, எண்.177/01 என்ற முகவரியில் வசிக்கும் அனிதா, வ/42, க/பெ.வினோத்குமார் என்பவர் கடந்த 28.11.2021 அன்று மதியம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வார்டில் சிகிச்சை பெற்று வந்த தனது தாயை, டாயலிஸ் சிகிச்சைக்கு வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றபோது, வார்டில் கைப்பை மற்றும் செல்போனை வைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அனிதாவின் செல்போன் மற்றும் கைப்பை திருடு போயிருந்தது தெரியவந்தது.. இது குறித்து அனிதா C-4 RGGH காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேற்படி செல்போன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உதவி ஆய்வாளர் திரு.A.சுரேஷ், தலைமைக் காவலர்கள் தியாகராஜன் (த.கா.26027), சார்லஸ் (த.கா.26762), அமுதா பாண்டியன் (த.கா.36287) மற்றும் காவலர் தவசேகரன் (கா.51839) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்தனர். மேலும், பூக்கடை சைபர் குற்றப்பிரிவினர் உரிய தொழில்நுட்ப வசதிகள் உதவியுடன் கண்காணித்து மேற்படி செல்போன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சத்தியராஜ், வ/36, த/பெ.காசிநாதன், எண்.52, நரசிம்மா நகர் 1வது தெரு, புளியந்தோப்பு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சத்தியராஜ் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வார்டில் உள்ள நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன்களை திருடியது தெரியவந்தது.
சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், சுற்றுக் காவல் ரோந்து மற்றும் தரை ரோந்து மூலம் தீவிரமாக கண்காணிக்கவும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின் பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.D.மீனா, தலைமைக் காவலர் R.சேவியர் ராஜாமணி, (த.கா.26934) முதல் நிலைக்காவலர் T.பழனி, (மு.நி.கா.32760) மற்றும் K.சிலம்பரசன், (கா.49994) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 17.01.2021 அன்று அதிகாலை, அயனாவரம், மேடவாக்கம் டேங்க் சாலை சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் அவரை சோதனை செய்தபோது, அவர் வசம் 6 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவரது பெயர் கலைமணி, வ/24, த/பெ.திருநாவுக்கரசு, 29வது தெரு, முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர், எம்.கே.பி.நகர், சென்னை என்பதும், அயனாவரம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் திருடியதும் ஒப்புக் கொண்டார். அதன்பேரில், எதிரி கலைமணி, கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 சைக்கிள் ஆகியவை
பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் குற்றவாளி கலைமணி மீது ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 19.01.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.