கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்கள் கைது. 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தர விட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையாளர் வி.விக்ரமன் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் மனோஜ்குமார், செல்வகுமார், தலைமைக் காவலர் வெங்கடேசன், முதல்நிலைக் காவலர்கள் சங்கர், சண்முகம் மற்றும் பூர்ணகுமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 30.1.2021 அன்று காலை, முட்டுக்காடு, சோதனைசாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, சந்தேகப்படும்படி வந்த 5 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 1.முத்துக்குமார், வ/25, தூத்துக்குடி மாவட்டம் 2.செல்வராஜ், வ/47, தூத்துக்குடி மாவட்டம் 3.அம்ஜித், வ/42, பல்லாவரம் 4.ராஜகுருதி, வ/24, பழைய பெருங்களத்தூர் 5.பட்டுராஜா, வ/27, தூத்துக்குடி மாவட்டம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிட மிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பான் மசாலா பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. இராயப்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது- 11 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) தொடர்ச்சியாக, E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சார்லஸ் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா, தலைமைக் காவலர்கள் ராமமூர்த்தி, சுகுமார், ராம்குமார், முதல் நிலைக் காவலர்கள் தியாகராஜன், திருநாவுக்கரசு மற்றும் சங்கர் தினேஷ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 29.01.2021 அன்று காலை, இராயப் பேட்டை, நடேசன் ரோடு மற்றும் லாயிட்ஸ் ரோடு சந்திப்பு அருகே கண்காணித்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்களின் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த 1.முகமது யாசின், வ/30, திருவல்லிக்கேணி, 2.முகமது நாசிம், வ/23, இராயப்பேட்டை, 3.சையது ஹமீது, வ/24, திருவல்லிக்கேணி ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 கிலோ எடை கொண்ட கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. வண்ணாரப்பேட்டையில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்கள் கைது- 8.8 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் போதை தடுப்புக்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, வண்ணாரப்பேட்டை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், தலைமைக் காவலர்கள் பாரதிதாசன், ராமமூர்த்தி, சுரேஷ்கமார், சரவணன் மற்றும் சிவகாமி ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர், 21.01.2021 அன்று இரவு M-7 மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விச்சூர், பெரிய ஈச்சங்குழி சந்திப்பு அருகே தீவிரமாக கண்காணித்து, அங்கு மறைவான பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.மகாலஷ்மி, பெ/வ.57, விச்சூர், மணலி, 2.ஜெயா, வ/45, விச்சூர் ஆகிய 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.8 கிலோ எடை கொண்ட கஞ்சா
பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. மாங்காட்டில் திருமண மண்டபத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடிய நபர் கைது: 7.பவுன் சவரன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன்கள் மீட்பு: சென்னை, பம்மலைச் சேர்ந்த விஜயக்குமார், வ/61, த/பெ. முருகேசன் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 26.01.2021 அன்று மாங்காடு, பரணிபுதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று ஒரு அறையில் தங்க நகைகள் வைத்துவிட்டு, மேற்படி அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, விஜயகுமா தங்கியிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அவரது 7 ½ சவரன் தங்கநகைகள் மற்றும் 2 செல்போன்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இது குறித்து விஜயக்குமார் T-14 மாங்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. T-14 மாங்காடு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் இம்தியாஸ் (மு.நி.கா.43573) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.சதிஷ் ஆகியோர் மேற்படி திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று விசாரித்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட பன்னீர்தாஸ் (எ) பன்னீர்செல்வம், வ/23, த/பெ.லெட்சுமணன், எண்.7/332, டி.டி.கே நகர், 3வது தெரு, பொழிச்சலூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 7 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன்கள் மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
5.அம்பத்தூர் பகுதியில் நள்ளிரவு சரக்கு வாகனத்தை மறித்து ஓட்டுநரை தாக்கி,செல்போன் மற்றும் பணம் பறித்துச் சென்ற 3 குற்றவாளிகள் சில மணி நேரங்களில் கைது: சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்த வின்னரசு, வ/26 என்ற வேன் ஓட்டுநர் 03.01.2021 அன்று அதிகாலை சுமார் 01.30 மணிக்கு பூந்தமல்லியில் இருந்து புழல் நோக்கி அவரது சரக்கு வாகனத்தை ஓட்டிக் கொண்டு, அம்பத்தூர், சண்முகபுரம் சர்ச் அருகே வேகத்தடை அருகே மெதுவாக சென்றபோது, 3 நபர்கள் உதவி கேட்பது போல நடித்து சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, ஓட்டுநர் வின்னரசுவை கல்லால் தாக்கி, அவரது செல்போன் மற்றும் பணம் ரூ.1,000/- ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து வின்னரசு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், இரவு ரோந்து செக்டார் பணியிலிருந்த தலைமைக் காவலர் எஸ். மணிகண்டன் (த.கா.52929), ஊர்க்காவல் படை வீரர்கள் ஜெகதீஸ்வரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளின் அடையாளங்களை கொண்டு, மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.ஐயப்பன், வ/21, அம்பத்தூர், 2.ராஜசேகர், வ/28, சூரப்பட்டு, அம்பத்தூர், 3.சூர்யா, வ/22, அம்பத்தூர் ஆகிய 3 குற்றவாளிகளை சில மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் பணம் ரூ.1,000/- பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 01.02.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.