சீனா, பாகிஸ்தானுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார். அனைத்துச் சம்பவங்களும் தேதி குறிக்கப்பட்டே நடக்கின்றன என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் லடாக் எல்லையில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய -சீனப் படைகள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில் சிக்கந்தர்பூர் தொகுதியில் எம்எல்ஏ சஞ்சய் யாதவ் தலைமையில் கிருஷ்ணன் கோயிலுக்கு பூமி பூஜை நடக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “ ஒவ்வொன்றுக்கும் தேதி குறிக்கப்படுகிறது. எப்போது நடக்க வேண்டும், என்ன நடக்கவேண்டும், அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து, ராமர்
கோயில் கட்டுவது என அனைத்துக்கும் தேதி குறிக்கப்பட்டது.
சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் எப்போது போர் தொடங்கவேண்டும் என்பதற்குக் கூட பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார்” எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி தொண்டர்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டும் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசினார். முன்னதாக, மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் நேற்று பேசுகையில், “சீனாவுடன் எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது. அதேசமயம், ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் இந்தியாவிடம் இருந்து எடுக்க அனுமதிக்கமாட்டோம்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் சீனாவுடன் போர் தொடுக்க நாள் குறிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கின் கருத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “ஆக, பிரதமர் பெயர் தெரியாத எதிரியுடன் போருக்குத் தயாராகிவிட்டார். எல்லையில் எந்த நிலமும் ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் கூறுகிறார், ஆனால், தேதி குறிக்கப்பட்டது எனக் கூறியது அவருக்கு மட்டுமே தெரியும். ஆக இதைத்தான் பிரதமர் குறைந்த அளவு நிர்வாகம் என்று கூறுகிறாரா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.