சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 01.02.2021 அன்று நாடாளுமன்றத்தில் 2021 – 22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் பொருளாதாரத் தேக்கம் போன்றவைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தரத் தொழில்கள் என நாட்டின் உற்பத்தித் தொழில்கள் மரணப் படுக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவைகள் மறுவாழ்வுக்காக உயிர் தண்ணீர் கேட்டு கதறிக் கண்ணீர் வடித்து வருகின்றன. வரலாறு காணாத அளவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், நாடு முடக்கம் கோடிக் கணக்கானோர் வேலை வாய்ப்புகளை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பரிதவித்து வருகின்றனர். வேளாண்மைத் துறையில் நீடித்து வந்த நெருக்கடி வெடித்து தொடர் போராட்டங்களாக வெடித்துள்ளது. இதுபோன்ற மக்களின் வாழ்வாதாரா பிரச்சனைகளை மத்திய நிதி நிலையறிக்கை பார்க்க மறுத்து முகத்தை திருப்பிக்கொண்டது. விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக டீசல் லிட்டருக்கு தலா ரூ4/=ம் பெட்ரோல் லிட்டருக்கு தலா ரூ.2.50/ம் செஸ் வசூலிப்பதாக அறிவித்தள்ளது. விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தைக் காட்டி, எரிபொருள் நுகர்வோர் மீது சுமை ஏற்றுவது வர்த்தக சூதாட்ட அரசியல் சதி என்பதை எளிதில் உணரமுடியும். வழக்கம் போல் கார்ப்ரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியுள்ளது. ஜனநாயக உரிமைகளை மறுத்து, நியாயத்தின் குரலை அடக்குவதற்கு உள்துறை நிர்வாகத்திற்கு நேசக் கரம் நீட்டியுள்ளது. “சுயசார்பு இந்தியா” என்ற பெருமுழக்கம் செய்து, அன்னிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் வஞ்சக எண்ணம் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கை, நாட்டை அன்னிய முதலீட்டிற்கு அடகுவைத்து, அடிமைப்படுத்தும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நாட்டு மக்களை எச்சரிக்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.