சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர்

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள்/ உயர் ஆணையர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இன்று சமர்ப்பித்த அறிமுக ஆவணங்களை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களின் விவரங்கள் வருமாறு: 1. டாக்டர் ரால்ஃப் ஹெக்னர், சுவிட்சர்லாந்து தூதர் 2. ரூபன் காசி, மால்டாவுக்கான உயர் ஆணையர் 3. கில்பர்ட் ஷிமானே மங்கோல், போட்ஸ்வானா நாட்டுக்கான உயர் ஆணையர். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகளுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த மூன்று நாடுகளுடனும் இந்தியா நட்பு பாராட்டி வருவதைக்
குறிப்பிட்ட அவர், அமைதி மற்றும் வளமையை ஒத்த குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே, இந்த நாடுகளுடனான தொடர்பு வலுவடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

2021- 22ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையில், உறுப்பினராவதற்குக் கோரியிருந்த இந்தியாவிற்கு ஆதரவளித்த சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா அரசுகளுக்கு அவர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். கொவிட்-19 பரவலில் இருந்து காத்துக் கொள்ளவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்தார். எனினும் சர்வதேசச் சமூகத்தின் கூட்டு முயற்சியால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, இதிலிருந்து அனைவரும் மீண்டும் எழுவோம் என்று தாம் நம்புவதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.