சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற்றது. மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள். மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும். நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் உதயநிதி குரல் கொடுத்துள்ளார். மேலும் அவரின் ட்வீட்டில்… உச்ச நட்சத்திரங்கள் ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்! இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.