F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் ஆயுதப்படை பெண் காவலர் M.பத்மாவதி (பெ.கா.42539) ஆகியோர் கடந்த 12.9.2019 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.9.2019) சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் என்.எம். ரோடு சந்திப்பு அருகே காவல் வாகனத்தில் செல்லும்போது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது, நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் அலறிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே, காவல் ஆய்வாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் மூலம் தகவல் கொடுத்து அருகில் சென்று விசாரித்தார்.
அப்பொழுது அந்த பெண்மணி மிகவும் முடியாத நிலையில் இருந்ததால், காவல் ஆய்வாளர் சித்ரா, பெண் காவலர் பத்மாவதி மற்றும் பெயர் விலாசம் தெரியாத வயதான பெண்மணி ஆகியோர் சேர்ந்து அப்பெண்ணிற்கு அங்கேயே பிரசவம் பார்த்து அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றினர். விசாரணையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் பெயர் பானுமதி, க/பெ.வசந்தகுமார், சௌராஷ்டிரா நகர் 8வது தெரு, சூளைமேடு என்பதும், அப்பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ பிடிக்க சென்றதும், அதற்குள் அப்பெண்ணிற்கு குழந்தை பேறு ஆனதும் தெரியவந்தது.
பின்னர் காவல் ஆய்வாளர் திருமதி.சித்ரா மற்றும் பெண் காவலர் பத்மாவதி சிறிது நேரத்தில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பானுமதி மற்றும் அவரது பச்சிளம் ஆண் குழந்தையை ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தக்க சமயத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் பெண் காவலர் M.பத்மாவதி (பெ.கா. 42539) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 14.09.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.