சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் டாக்டர் வனீதா அகர்வால் ஏற்பாட்டின்படி சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனில் அக்கறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா பயிற்சியின் 8-ம் நாள் பயிற்சி 07.11.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் முதல் அதிகாரிகள் வரை 1400 பேர் பங்குபெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியில் மூச்சுப்பயிற்சி மற்றும் பிராணயாமா பயிற்சிகள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்பட்ட யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தப் பயிற்சியின் மூலம் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும் மன அழுத்தமின்றி, மகிழ்வுடன் பணியாற்றவும், இன்முகத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் பணியில் ஈடுபடவும், சோர்வு அடையும் போது, உடனடியாக எப்படி relax ஆவது என்பது குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்ட யோகாசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் மூலம் நாள் முழுவதும் நின்று பணிபுரியும் போது கால்களிலும் இடுப்புப் பகுதிகளிலும் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிப்பது எப்படி என்பது குறித்தும் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்தப் பயிற்சியினால் கிடைக்கப்பெற்ற பயன்கள் அளப்பரியது. இந்த காலகட்டத்தில் சூழலுக்கேற்றவாறு நமது ஆரோக்கியத்தையும் பேணிக்காப்பது மிகவும் அவசியமாகும். அதேபோல் பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட மருந்தில்லா மருத்துவம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எனவே இத்தகைய பயிற்சியை தொடர்ந்து பல்வேறு வகைகளில் ஏற்பாடு செய்தமைக்காகவும் காவலர்கள் பயன்பெற்றதற்காகவும் காவல் ஆணையாளருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் H.ஜெயலட்சுமி மனநிறைந்த நன்றிகளை தெரிவித்து இன்றைய பயிற்சியை இனிதே நிறைவு செய்தார்.