சென்னை விமான நிலையத்தில் 1.7 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த நவுஃபர், 28 மற்றும் அகமது இர்ஷாத் அலி, 31, காஞ்சிபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 23, சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் மோகன், 38, மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சதாம் உசேன், 25, ஆகியோர் சந்தேகத்தின் பேரில் வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களை சோதனை செய்த போது அவர்களது கைப்பையில் இருந்து 597 கிராம் எடையிலான 16 தங்கத்துண்டுகளும், அவர்களில் இரண்டு பேரிடம் இருந்து தங்கப்பசை கொண்ட இரண்டு பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், காலணியில் இருந்தும், ஜீன்ஸ் கால் சட்டைப் பையில் இருந்தும் தங்கப்பசை கொண்ட பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நான்கு பொட்டலங்களில் 701 கிராம் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் ஒருவரது உடலில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 398 கிராம் தங்கம் கொண்ட பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ 87.62 லட்சம் மதிப்புடைய 1.7 கிலோ 24 கேரட் தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.