சென்னை விமான நிலையத்தில் 1.67 கிலோ தங்கம், ரூ.9.80 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூ ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து பிளை துபாய் விமானம் மூலம் சென்னை வந்த தூத்துக் குடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது பையில் இருந்த பொம்மையில் ஒரு சிறிய டிரான்ஸ்பார்மர் இருந்தது. இதில் 49 சிறிய தங்க தகடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 349 கிராம் எடையுடன் கூடிய இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.18 லட்சம். இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு விமானத்தில் வந்த ராமநாத புரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது, கலந்தர் பஹ்ருதீன், சென்னையைச் சேர்ந்த முடாசீருதீன் ஆகியோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்கள் 5 தங்க பசை பொட்டலங்களை ஆசன வாயிலும், 2 தங்க பசை பொட்டலங்களை, சட்டை கையில் மறைத்தும் கடத்தி வந்தனர். மொத்தம் 730 கிராம் தங்க பசையிலிருந்து, 629 கிராம் சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. மேலும், இவர்களின் பையில் 2 தங்க துண்டுகள் இருந்தன. இவர்களிடம் கைப்பற்றப்பட்ட 701 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.36.74 லட்சம். இது தொடர்பாக சாகுல் ஹமீது, கலந்தர் பஹ்ருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பதாருதீன் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 2 தங்க பசை பொட்டலங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இவற்றிலிருந்து 265 கிராம் சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.13.6 லட்சம். துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானத்தை சோதனை செய்ததில், பயணி இருக்கை ஒன்றின் அடியில் 10 தங்க பசை பொட்டலங்கள் 406 கிராம் எடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றிலிருந்து 356 கிராம் தங்கம் பிரித் தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 18.65 லட்சம். மற்றொரு விமானத்தில் வந்த ராமா நாதபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் அப்துல் மஜீத், முகமது ரகமதுல்லா ஆகியோரிடம் நடத்திய சோதனையில், அவர்களது பையில் 4 கிலோ, முதல் ரக குங்கப்பூ இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.9.80 லட்சம். எட்டு பேரிடம் கைப்பற்றப்பட்ட 1.67 கிலோ தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.87 லட்சம் எனவும், பறிமுதல் செய்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.96.8 லட்சம் எனவும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.