தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் (27) சட்ட விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த மோசஸ் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வந்தார். இந்தப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத, சமூக விரோத செயல்களை துப்பறிந்து ஆதாரப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டு வருபவர். இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பது மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வது ஆகிய சமூக விரோத செயல்கள் குறித்து அண்மையில் ஆதாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டார். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பல்கள் கூட்டுச் சேர்ந்து செய்தியாளர் மோசஸை கொடூரமாக படுகொலை செய்துள்ளன. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத் துறையின் சுதந்திரத்தையும், அதில் பணிபுரிகிற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் அனைவரையும் பாதுகாப்பது அரசின் கடமைப் பொறுப்பாகும். இந்தச் சம்பவத்தில் உயிர் பலியான மோசஸ் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கி பாதுகாக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.