ஆசிரியர்: நி.அமிருதீன், உதவிப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 93629400 95
எம்மா இன்னிக்கி லீவு போட்டு வீட்ல இருமா
முடியாதும்மா… நிறைய கொரோனா பேசன்ட் இருக்காங்க
இன்னிக்கு ஒரு நாள் இந்த அம்மாவுக்காக லீவு போட்டுமா
முடியாதும்மா
இந்த அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா, தப்பு தப்பா பேசாத மா உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் பிபி தான் அதிகமா இருக்கு. அப்படி உனக்கு ஏதாவது ஒன்னு ஆனாலும் இங்க ஒரு உசுரு, அங்க 18 உசுரு. எனக்கு அவங்கதான் ரொம்ப முக்கியம். வேளாவேளைக்கு கரெக்டா மாத்திரை போட்டுக்கோ. அடுப்பில் பால் சூடு பண்ணி வச்சிருக்கேன் எடுத்து குடிச்சுக்கோ. இட்லி போட்டு வச்சிருக்கேன் பால் தொட்டு சாப்பிட்டுக்கோ. நான் காலையில எட்டு மணிக்கு வந்துருவேன். பத்திரமா இரு, போயிட்டு வரேன்மா… என்றவாறு அம்மாவை திரும்பிக்கூட பார்க்காமல் செல்வி தனது ஸ்கூட்டரை கிளப்பினாள்.
ஸ்கூட்டர் மெயின் ரோட்டில் வேகமாக பறந்தது. அவள் மனமும் அம்மா ஞாபகத்தில் மூழ்கியது. நெஜமாவே அம்மாவுக்கு ஏதாவது ஆயிடுமா? சேச்சே அப்படி எல்லாம் ஆகாது, அம்மா என்னை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்தாங்க… அவளின் எண்ணங்கள் இருபது வருடங்களுக்கு முன் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.
செல்வி பெயருக்கேற்றபடி செல்வி ஆகவே இருந்தாள் திருமணம் ஆகியும் கூட. திருமணம் முடிந்து முதலிரவில் கணவன் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்யவே, பெரிய சண்டையாகி இரவோடு இரவாக தாய் வீட்டுக்கு வந்துவிட்டாள் செல்வி. பலர் சமரசம் பேசினார்கள் எதுவும் உடன்படவில்லை பிறகு கணவன் இவளை பார்த்து ஒரு வார்த்தையை வீசினான். வெகுண்ட இவள் தாலியை கழட்டி சபை முன்னால் வீசிவிட்டு வந்தவள், இன்றுவரை திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அப்படியே அவளைப் பார்த்து அவன் என்ன சொன்னான் தெரியுமா? பொட்டச்சிக்கு படிச்ச திமிரு… அதான் நடுராத்திரியில கட்டுன புருஷன விட்டுட்டு ஓடி போய்ட்டா ஓடுகாலி……. . இந்த பேச்சு அவள் காதில் நெடு நாட்கள் வரை ஒலித்துக்கொண்டே இருந்தது. பெண்களைப் படிக்க வைப்பார்களாம், பிறகு ஏன் படித்தாய்? படித்த திமிர் என்பார்களாம்… இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொள்வாள் செல்வி. 12ஆம் வகுப்பு முடிக்கும் போது அவளின் தந்தை மாரடைப்பால் மாண்டு போனார். அடுத்து கல்லூரிக் கனவுகளோடு காத்திருந்த செல்விக்கு அது பேரிடியாக இருந்தது. செல்வியின் தாய் வீட்டு வேலை செய்யப் போகும் இடத்தில் ஒரு பெண்மணி நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் செல்வியின் நிலைமையைக் கண்டு அவளை நர்சிங் படிக்க வைத்தார்.
படிப்பு முடிந்து வேலைக்கு கிளம்பும் முன் அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவளுடைய தாய் ஒரு புரோக்கரை பிடிக்க, அவனும் குடிகாரனை நல்ல மாப்பிள்ளை என்று செல்வி தலையில் கட்டிவிட்டான். பிறகு நடந்தது தான் உங்களுக்கு தெரியும். ஊர் ஆயிரம் பேசும் ஆனாலும் நம் வாழ்க்கையை வாழ்வது நாம்தான் என்று எண்ணிய செல்வி உடனடியாக பக்கத்து ஊரில் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்தாள்.
சில நாட்களில் வீட்டையும் அருகிலேயே குடி மாற்றினாள். புதிய மக்கள் புதிய வேலை கவலைகளை மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தாள். கிட்டதட்ட மூன்று வருடங்கள் கழிந்து இருக்கும். அரசு வேலைக்காக விண்ணப்பம் இட இவளது மதிப்பெண்களுக்கு வேலை எளிதாக கிடைத்துவிட்டது. இப்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர். அருகிலேயே தங்குவதற்கு அரசு விடுதி என வாழ்க்கையே மாறிவிட்டது.
தாய் எப்போது திருமணப் பேச்சு எடுத்தாலும் எனக்கு திருமணமே வேண்டாம் உனக்கு நான் எனக்கு நீ அவ்வளவு தான் என் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொள்வாள். ஒரு ஐந்தாறு வருடங்கள் ஓட அழகு நகரில் 2 சென்ட் இடம் வாங்கி சொந்தமாக வீடு கட்டிவிட்டாள். அந்த அழகு நகர் ஒரு மிடில்கிளாஸ் ஏரியா. இரண்டே தெருக்கள் அதில் 30 வீடுகள் அனைவரும் நர்ஸ்க்கா நர்ஸக்கா என்று செல்வியிடம் அன்பாக பழகினார்கள்.
செல்வியும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை அவ்வப்போது தந்துகொண்டே இருப்பாள். அந்த தெருவில் செல்வி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. நர்ஸ் அக்கா என்று சொன்னால் சின்ன பையன் கூட செல்வியை அடையாளம் காட்டி விடுவான். இப்படியாக செல்வி உடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்க திடீரென்று ஒரு நாள் செல்வியின் தாய் மயங்கி விழுந்தாள். தீவிர பரிசோதனைக்கு பிறகு ரத்த அழுத்தம் சர்க்கரை போன்ற உபாதைகளால் இனி காலத்திற்கும் மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். எனவே தாய் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள்.
எங்கோ புறப்பட்ட கொரோனா இந்தியாவிலும் வந்துவிட இவள் மருத்துவமனையிலும் 18 நோயாளிகள். அனைவர்களுக்கும் இன்று பரிசோதனை முடிவு வரப்போகிறது. நெகட்டிவ் என வந்துவிட்டால் நாளை முதல் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அம்மா பக்கத்தில் இருக்கலாம் என்ற சிந்தனையை கலைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றாள் செல்வி.
வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று கொரோனா நோய் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு வார்டுக்குள் சென்றாள். நோயாளிகளுக்கு மையமாக நின்று சத்தமாக பேச ஆரம்பித்தாள். மாலை உங்களுக்கு ரிசல்ட் வந்துவிடும். கண்டிப்பாக உங்களுக்கு கொரோனா நோய் இருக்காது நீங்கள் நிம்மதியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களை உற்சாகமூட்டினாள். அனைவரும் எப்போது மாலை நேரமாகும் என கடிகாரத்தை பார்த்தவாரே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தனர்.
மாலை 5 மணி ரிசல்ட் குறித்த இமெயிலை பிரிண்ட் அவுட் ஆக பிரிண்டர் வெளியே துப்பியது. அதை கையில் எடுத்துப் பார்த்த செல்விக்கு அவ்வளவு மகிழ்ச்சி. 18 பேருக்கும் கொரோனா நோயில்லை. வேகமாக தாளை எடுத்துக்கொண்டு வார்டுக்குள் நுழைய முற்பட்டவேளை அவளுடைய செல்போன் அழைத்தது எடுத்துப் பார்த்தாள். பக்கத்து வீட்டு மாமி நம்பர். உடனே ஏதோ ஆகிவிட்டது என நினைத்து போனைஆன் செய்தாள்.
செல்வி.. உங்க அம்மா..
தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் மாமி. செல்விக்கு எல்லாம் புரிந்துவிட்டது. கண்களில் கண்ணீரோடு வார்டுக்குள் நுழைந்து நோயாளிகளை பார்த்து, உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. உங்களில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இவ்வளவு நாள் நாம் பட்ட சிரமத்திற்கு பதில் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள். நோயாளிகள் அனைவரும் எண்ணிக் கொண்டார்கள் இது நர்சின் ஆனந்தக் கண்ணீர் என்று. ஆனால் அவளுக்கு மட்டும்தான் தெரியும் இது தாய் இறந்ததினால் வந்த கவலையின் கண்ணீர். கடைசி நேரத்தில் தாயுடன் இருக்க முடியவில்லையே என்ற வேதனையின் கண்ணீர். செல்வி கொரோனாவை வென்றுவிட்டாள். ஆனால் தாயை இழந்து விட்டாள்…… வாழ்க செவிலியர்களின் தியாகம்.