Double Meaning Productions, ஒரு தயாரிப்பு நிறுவனம் தனது படைப்புகளின் அடையாளமாக நிறுவனத்தின் சார்பில் “சைக்கோ” திரைப்படத்தை தந்து, விமர்சக ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை குவித்த இந்நன்நாளில் ஒரு வருட நிறைவை பெருமிதத்துடன் “சைக்கோ” படத்தின் முதலமாண்டை கொண்டாடுகிறது. Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது.
விநியோக தளத்தில் வெற்றிக்கு (Double Meaning) இரட்டை அர்த்தம் உண்டு. படைப்பின் முழுமையை அடைந்த திருப்தி மற்றும் வியாபார ரீதியில் விநியோக தளத்தில் அடையும் வெற்றி என இரண்டும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் “சைக்கோ” படத்தின் வெற்றியில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். திரையரங்குள் முழுதும் பயமும் இருளும் பரவியிருந்தாலும் அதனை மீறி அன்பின் ஆன்மா அனைவருடத்திலும் பரவியிருந்தது. சில காட்சிகள் இமை மூட மறுத்து மலர்ந்து விரிய, அதற்கு மாறாக சில காட்சிகள் கண்கள் இறுக மூடிக்கொள்ளும் இரண்டு தன்மைகளும் இப்படத்தில் நடந்தது. கண் தெரியாத மனிதனின் தீராத தேடல், அவன் ஆத்மாவின் அலைபாயும் தன்மை அதன் சைக்கோத்தனம் படம் முழுக்க விரவியிருந்தது. இயக்குநரின் அதீதமான படைப்பு திறன், படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருந்தது. அவரின் முத்திரையும் படத்தில் பலமாக பதிந்திருந்தது. கண்கள் ஈரம் கொள்ள செய்து, மனதை பிசையும் எதிர்மறை பாத்திரத்தின் ஒப்புதல் வாக்குமூலம் வார்த்தைகளாக இல்லாமல், காட்சிகளாக விரிந்தது அழகியலின் உச்சமாக, இயக்குநரின் முத்திரையுடன் இருந்தது. தீவிர திரை ரசிகர்கள் படத்தில் புத்த மதத்தின் நம்பிக்கை கதையான “அங்குலிமாலா” கதை கையாளாப்பட்டிருக்கும் விதத்தையும், அறிவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடான “ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்” பயன்படுத்தப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்கள்.
இயக்குநர் மிஷ்கினின் இந்த சைக்லாஜிகல் திரில்லர் திரையில் வடிக்கப்பட்ட சாத்தான் தேவனின் அன்பை தேடும் மாறுப்பட்ட கவிதை வடிவமாக, மனிதத்தை போற்றுவதாக இருந்தது. உதயநிதி ஸ்டாலினின் அற்புத நடிப்பு கச்சிதமாக இருந்தது. அதிதி ராவ் ஹைதாரியின் உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் ராஜ்குமார் பிச்சுமணியின் அசத்தலான பாத்திர ஆளுமை, ரசிகர்களுக்கு பேருவகை தந்தது. இயல்பிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட இளையராஜாவின் இசை உயிரை உருக்குவதாக அமைந்திருந்தது. இப்படம் தந்த அடையாளத்தினை, வெற்றியை எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறோம். சிபிராஜ் நடிப்பில் எங்கள் அடுத்த படைப்பாக உருவாகும் “மாயோன்” படத்தின் விஷிவல்கள், எங்களது வெற்றி பயணம் தொடரும் எனும் நம்பிக்கையை அளித்துள்ளது. படக்குழுவில் உழைத்த நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும், விநியோகஸ்தர்கள், திரையிட்டவர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் தீவிர திரைப்பட காதலர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் Double Meaning Productions நிறுவனம் ரசிகர்களை ஏமாற்றாத தீவிரமான படைப்புகளை தொடர்ந்து தருமென மீண்டுமொருமுறை உறுதி அளிக்கிறோம். நன்றி. என்று கூறினார். மக்கள் தொடர்பு: டி.ஒன்.