“சொன்னது நீ தானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில் குமரன்

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா கனடா வாழ் தமிழ் கலைஞர்கள்  மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன்  ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற,  ‘சொன்னது நீ தானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து  வெளியிட்டுள்ளார்.

தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த
பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு,  சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம்  மற்றும் இந்த பாடலை தயாரித்த செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த  பாடலை உருவாக்கியது குறித்து செந்தில்குமரன் கூறும்போது, “இந்த பாடல் என் அம்மா எப்போதும் விரும்பி  பாடக்கூடிய பாடல். அதனால் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை நானும் ரசித்துக் கேட்டுள்ளேன். தற்போது இந்தப்  பாடலுக்கான கவர் ட்ராக்கை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு காரணம் இந்த பாடலின் வழியாக ஒரு  செய்தியை சொல்ல விரும்பினேன். பொதுவாகவே இந்த பாடலை கேட்கும்போது, ஏதோ ஒரு சோகப்பாடல் என்பது தான்  பலரின் மனதிலும் தோன்றும். ஆனால், தான் இறந்து விட்டால் அதை நினைத்துக் கொண்டே, தன் மனைவி அவள்  வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. தனக்கு பிடித்த இன்னொருவரை மறுமணம் செய்து கொண்டு வாழ  வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை சொல்லியிருக்கும் பாடலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

 கடந்த பல  வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நிவாரண உதவிகள் செய்வதற்காக களத்தில் இறங்கியபோது, பல  விதவை பெண்மணிகளின் நிலையை நேரில் கண்டவன் என்கிற முறையில், இந்த பாடலை மீள் உருவாக்கம் செய்து  எங்கள் சமுகத்திற்கு ஒரு செய்தியினை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் பாடலின்  முடிவில் “ஒரு புது தொடக்கம் எப்போதும் சாத்தியமானது” என்று முடித்துளோம் என்று கூறுகிறார் செந்தில்குமரன்.