ஜம்மு காஷ்மீரின் குல்காம், புல்வாமா மாவட்டங்களில் நடந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூறியதாவது: ”தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு முதல் அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் சுற்றி வளைத்தது அறிந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இரவு முழுவதும் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இருவரில் ஒருவர் ஜங்கல்போரா திவ்சார் குல்காம் பகுதியைச் சேர்ந்த தாரீக் அகமது மிர் என்பதும், மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சமீப் பாய் என்கிற உஸ்மான் என்பதும் தெரியவந்தது. இதில் உஸ்மான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஏ பிரிவு தீவிரவாதி என்பது தெரியவந்தது. கொல்லப்பட்ட இருவருமே ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இருவருமே தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புரா மிர்பஜாரில் உள்ள போலீஸ் அதிகாரி குர்ஷித் அகமது, மிர்பஜார் கிராமத் தலைவர் ஆரிப் அகமது ஆகிய இருவரைக் கொலை செய்த வழக்கில் இரு தீவிரவாதிகளும் தேடப்பட்டு வந்தனர். இந்தத் தாக்குதல் மட்டுமல்லாமல் பல்வேறு தாக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து எம்4 ரக கைத்துப்பாக்கி, ரைபிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தவிர புல்மாவா மாவட்டத்தில் உள்ள தாதூரா பகுதியிலும் இரு தீவிரவாதிகள் போலீஸாருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். இருவரிடம் இருந்து ஏ.கே.ரகத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன”. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.