தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான காதலின் காரணமாக பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குநருமான வினோத் குருவாயூர் மற்றும் நடிகர் அப்பாணி சரத் ஆகியோர் ஒரு புதிய தமிழ் திரைப்படத்திற்காக இணைகின்றனர். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டிமீடியா தயாரிக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு டாக்டர் ஜெயராம் சிவராம் பொறுப்பேற்றுள்ளார். திரைப்படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ‘சண்டைக்கோழி 2’ மற்றும் ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்களின் மூலமும், ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸ் மூலமும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான அப்பாணி சரத், நடிகர் ஆரியின் வில்லனாக வேகமாக வளர்ந்து வரும் தமிழ் திரைப்படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இது தவிர, பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் அவர் பிசியாக உள்ளார். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியர்களில் ஒருவரான வினோத் குருவாயூர், ‘சிகாமணி’ மற்றும் ‘சகலகலாசலா’ போன்ற திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குநராகவும் திகழ்கிறார். தனது முதல் தமிழ் படம் குறித்து மனம் திறந்த அவர், “தமிழ்நாடு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் எனும் எனது கனவு தற்போது நிறைவேறி உள்ளது,” என்றார்.
“தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. அது குறித்து நன்கு ஆராய்ந்து கதை மற்றும் திரைக்கதையை இயற்றி உள்ளோம். பழனியை சுற்றி படமாகவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 15 அன்று தொடங்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான ஆயத்த பணிகளை நடிகர் அப்பாணி சரத் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவித்த வினோத், மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருவதாக கூறினார். படத்தைப் பற்றி பேசிய ‘அங்கமலி டைரீஸ்’ புகழ் சரத், “மாடா என்னும் கிராமத்து இளைஞனாக நான் இதில் நடிக்கிறேன். காளைகளை சுற்றியே அவனது வாழ்க்கை சுழல்கிறது. வருடம் ஒரு முறை அவன் ஜல்லிக் கட்டுக்கு போவான். காளைகள் மீதான அவனது பாசம், அவன் எதிர்கொள்ளும் எதிர்பாராத ஒரு நிகழ்வு ஆகியவற்றை மண் மணம் மாறாமல் இத்திரைப்படம் கூறும். ஒரு அழகிய காதல் கதையும் இதில் உண்டு,” என்று கூறினார். “காளைகளுடன் வாழும் மாடாவாக மாறுவது ஒரு சவாலான பணி என்ற போதும், அதற்கான பயிற்சியை நான் நன்றாக எடுத்திருப்பதாக நினைக்கிறேன். இயக்குநர் வினோத் குருவாயூருடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்றில் முதன்மை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது பேரவா நிறைவேறியிருக்கிறது. தமிழ் மீதான எங்களது பற்று எங்களை ஒன்றிணைத்தது என்று கூறலாம்,” என்று அவர் மேலும் கூறினார். மக்கள் தொடர்பு: நிகில்முருகன்.