ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கும் உச்ச நீதிமன்றம்தான் தடை விதித்தது. டெல்லி சென்று அதற்காக புதிய சட்ட முன்வடிவை உருவாக்கியர்கள், அதே பாணியில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வைக்கலாம். அதைத்தான் திமுகவும் செய்யும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அதிமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபடி இருந்தனர். 8 மாதங்களில் திமுக ஆட்சி அமைந்தபின் நீட் தேர்வை ரத்து செய்யவைப்போம் என ஸ்டாலின் பதிலளித்தார். பேரவையில் ஸ்டாலின் பேசியதாவது:

“’நீட்’ பிரச்சினையைப் பொறுத்தவரைக்கும், கட்சிப் பாகுபாடு இன்றி, போராடுவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அங்கொன்றும், இங்கொன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சில குறைபாடுகளை, பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் சில விளக்கங்களைச் சொல்லியிருக்கிறோம். எனவே, அதற்கு மீண்டும் விளக்கத்தைச் சொல்ல நான் விரும்பவில்லை. எப்படி இதைப் போக்குவீர்கள் என்று அமைச்சர் கேட்டார். ஜல்லிக்கட்டுப் பிரச்சினை வந்தபோது, அதுவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுக்கும் தடை வந்தது. அப்போதும் நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள். இங்கே துணை முதல்வராக இருக்கக்கூடியவர்தான் அப்போது முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆக, அப்பொழுது டெல்லிக்குச் சென்று, வலியுறுத்தி, வற்புறுத்தி, புதிதாக ஒரு சட்ட முன்வடிவையே உருவாக்கி, அதற்காகவே சட்டப்பேரவை ஸ்பெஷலாக கூடி, தீர்மானம் போட்டு அனுப்பி அதை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, அந்த வழியிலேதான், 8 மாதங்களில் கொண்டு வருவோம் என்று நாங்கள் சொல்கிறோம். திமுக ஆட்சி விரைவிலே வரப்போகிறது. வந்ததற்குப் பிறகு அந்த முறையைக் கையாண்டு மத்திய அரசை வலியுறுத்துவது, வற்புறுத்துவது, அழுத்தம் கொடுப்பது. இங்கே மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சி ஓர் அழுத்தம் கொடுக்கிறபோது அதை நிச்சயமாக மத்திய அரசு பரிசீலிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வரும். அதைத்தான் நீங்கள் ஜல்லிக்கட்டிலே செய்தீர்கள். அதைத்தான் இந்த நீட் விஷயத்திலும் செய்ய வேண்டுமென்று நான் கோரிக்கை வைக்கிறேன். எனவே, அதை மீண்டும் நீங்கள் பரிசீலித்து மத்திய அரசுக்கு வேண்டிய அழுத்தத்தை இந்த அரசு தரவேண்டும்”. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.