ஜிஎஸ்டி வருவாய்ப் பகிர்வு விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக, உங்கள் மாநில முதல்வர்கள், உங்கள் எதிர்காலத்தை ஏன் அடகு வைக்கிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசும்போது, “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். மாநில அரசுகள் முன் இரு வாய்ப்புகளை வைக்கிறோம். மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். ரூ.2.35 லட்சம் கோடி வேறுபாட்டை ரிசர்வ் வங்கியிடம் கலந்தாய்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியே கடன் பெற்றுக்கொள்ள மத்திய அரசு கூறிவிட்டது.
இந்நிலையில் ஜிஎஸ்சி கவுன்சில் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 5 விளக்கங்களை அளித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
1. ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது.
2. நாட்டின் பொருளாதாரம் பிரதமர் மோடியாலும், கரோனாவாலும் அழிக்கப்பட்டது.
3. பிரதமர் மோடி ரூ.1.40 லட்சம் கோடி வரிச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி, ரூ.8,400 கோடியில் தனக்கு 2 விமானங்களை வாங்கியுள்ளார்.
4. மாநிலங்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசிடம் நிதியில்லை.
5. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்கள் கடன் பெற்றுக்கொள்ளட்டும் என்று கூறிவிட்டார். பிரதமர் மோடிக்காக, உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.