ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரை, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறையின் சென்னை வெளிப்புறப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விரிவான புலனாய்வுகள் நடத்தியும், ஆதாரங்களை சேகரிக்க சோதனைகள் நடத்திய பிறகும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்றங்கள் தடுப்பு நீதிமன்றம்-2 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் 29. 9..2020 வரையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். போலி ஆவணங்கள் மூலமாக, இல்லாத முகவரிகளில் வேறு சிலரின் உதவியுடன் ஜிஎஸ்டி பதிவுகளை இவர் செய்திருக்கிறார். ஜிஎஸ்டி மோசடி செய்வதற்காகவே இந்த போலி நிறுவனங்களை அவர் உருவாக்கியுள்ளார். எந்தப் பொருட்களோ அல்லது சேவைகளோ வழங்காமல், கமிஷன் அடிப்படையில் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு இந்தப் போலி நிறுவனங்கள் போலி இன்வாய்ஸ்களை அளித்துள்ளன. இந்த நபருடன் தொடர்புடைய மற்றவர்கள் தொடங்கிய போலி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட வரி இன்வாய்ஸ்கள் அடிப்படையில் இன்புட் வரி கிரெடிட்களைப் பயன்படுத்தி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில், கைது செய்யப்பட்ட நபரும், அவருக்குத் துணையாக இருந்தவர்களும் ரூ.107 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி. கிரெடிட் மோசடி செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இருந்தபோதிலும் தொடர்ச்சியான கண்காணிப்பைத் தொடர்ந்து, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் துணையாக செயல்பட்டவர்களை ஜிஎஸ்டி துறை தேடி வருகிறது. கைது செய்யப்பட்ட நபரால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட மோசடியான ஜிஎஸ்டி கிரெடிட்டைப் பெற்ற தொழில் நிறுவனங்களையும், மோசடியான கிரெடிட்களை வழங்கிய நிறுவனங்களையும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மன உளைச்சலை ஏற்படுத்தாத வரி நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள, நேர்மையான மற்றும் சட்டத்தின்படி செயல்படும் வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்பவர்கள், மோசடியாளர்களைக் கண்டறிவதில் இத் துறை தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. வரிசெலுத்தும் பலர், கண்காணிப்புப் பட்டியலில் இருப்பதாக இந்தத் துறை தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் தாங்கள் அனுப்பும் சம்மன்களுக்குப் பதில் அளிப்பதில் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சம்மன்களுக்குப் பதில் அளிக்காமல் இருப்பதே ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு வாய்ப்புள்ள குற்றச் செயலாகக் கருதப்படும் என்று அவர்கள் அனைவருக்கும் ஜி.எஸ்.டி. துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல் அளித்து, தாங்களாக முன்வந்து வரி செலுத்தும் நிலையை ஊக்குவித்து, நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்த உதவி செய்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை, சென்னை வெளிப்புறப் பகுதி பிரிவு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. தொடர்பான தகவல்களைப் பெற விரும்புபவர்கள், அண்ணா நகர் தலைமையகத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் சேவை மையத்தை, வரி செலுத்தும் மற்றும் நுகர்வோர் அனைவரும் நேரில் சென்றோ அல்லது 26142850. 26142851, 26142852 மற்றும் 26142853 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது Sevakendra-outer-tn@gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது முதன்மை ஆணையாளர் திரு. ரவீந்திரநாத் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.