டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு

டவ்-தே புயல் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 15ம் தேதி நடத்திய உயர்நிலை கூட்டத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள், டாமன் மற்றும் டையு, தத்ரா நகர் ஷவேலி நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் புயலை எதிர் கொள்ளும் தயார்நிலை குறித்து ஆலோசிக்கபட்டது. புயலால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சுகாதார வசதிகளின் தயார் நிலை குறித்து உள்துறை அமைச்சர் கேட்டறிந்தார். கொவிட் மருத்துவ மனைகள், பரிசோதனைக் கூடங்கள், தடுப்பூசி சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் மின் தடை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகளை தயார்நிலையில் வைக்கும்படி மாநில நிர்வாகிகள்/ மாவட்ட ஆட்சியர்களுக்கு திரு அமித்ஷா உத்தரவிட்டார். போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், மருத்துவமனைகளில் அத்தியாவசியப் மருந்து பொருட்களை போதிய அளவில் இருப்பு வைப்பதை உறுதி செய்யும்படியும் அவர் அறிவுறுத்தினார். புயல் கடந்து செல்லும் பகுதிகளில் உள்ள மருந்துவமனைகளில், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக கொவிட் மையங்களில் உள்ள நோயாளிகளை இதர மருத்துவமனைகளுக்கு மாற்றலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார். மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் மீதான புயலின் தாக்கம் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், 2 நாட்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை முன்கூட்டியே இருப்பு வைக்கும்படியும், ஆக்ஸிஜன் டேங்கர்களையும் முன்கூட்டியே அனுப்பும்படியும் அவர் உத்தரவிட்டார். மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மின் உற்பத்தி நிலையங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திரு அமித்ஷா உத்தரவிட்டார்.

குஜராத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசும் அதன் அமைப்புகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாகவும், அதை மாநிலங்கள் எந்த உதவிக்கும், எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் திரு அமித்ஷா தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவுப்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக குஜராத் மற்றும் மகாராஷ்டிர முதல்வர்கள் உறுதி அளித்தனர். மத்திய உள்துறை அமசை்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள், மரம் வெட்டும் இயந்திரங்கள், தொலை தொடர்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். குஜராத்துக்கு கூடுதலாக 15 மீட்புக்குழுக்கள், விமானம் மூலம் அனுப்பப்படுகின்றனர்.