டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தை தூண்டியதாகவும், சிஏஏ போராட்டக்காரர்களை திரட்டியதாகவும் குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் ஆகியோரின் பெயர்களை டெல்லி போலீஸார் துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 மாணவிகளின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சிஏஏ, என்ஆர்சி என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய அரசின் தோற்றத்தை சிதைக்க எந்தவகையான போராட்டத்தையும் நடத்துங்கள், எந்தஅளவுக்கும் செல்லுங்கள் என்று மாணவிகளை இவர்களை தூண்டிவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதிவரை நடந்த பயங்கர கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டார்கள், 581 பேர் காயமடைந்தனர். 93 பேர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தேவாங்கனா கலிதா, நடாஷா நார்வால், ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவி கல்பிஷா பாத்திமா ஆகியோர் கலவரத்தில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீஸார் நடத்தி விசாரணையில் அவர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 மாணவிகள் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் இரு நாட்களுக்கு முன்புதான் இந்த குற்றப்பத்திரிகைய குறித்த விவரங்களை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர். டெல்லி போலீஸார் தரப்பில் கூறுகையில் “ மாணவர்கள் கலிதா, நார்வார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் கோஷ், அபூர்வானந்த், ஆவணப்படஇயக்குநர் ராகுல் ராய் ஆகியோர் தங்களின் வழிகாட்டிகளாக செயல்பட்டனர். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி போராட்டம் நடத்துமாறு தெரிவித்தார்கள் எனத் தெரிவித்தனர்.
மேலும் ஜேஎன்யு மாணவர்கள் இருவர் அளித்த வாக்குமூலத்தில் கடந்த டிசம்பர் மாதம் டெல்லி தார்யாகாஞ்ச், ஜாப்ராபாத் சக்கா பகுதியில் நடத்திய போராட்டத்துக்கு எங்களுக்கு வழிகாட்டியாக கோஷ், அபூர்வானந்த், ராகுல் ராய் இருந்தார்கள் எனத் தெரிவித்ததையும் போலீஸார் குற்றப்பத்திரிகையில்குறிப்பிட்டுள்ளனர். டெல்லி கலவரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலவரத்தை தூண்டிவிடும் வகையில் ட்விட்டரில் கருத்துக்களை பதிவி்்ட்டார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரி பதிவிட்ட ட்விட்டில் “ மத்திய அரசு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லி போலீஸார் வருகிறார்கள். பாஜகவின் மூத்த தலைவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சட்டத்துக்குபுறம்பான செயல்கள் வருகின்றன. பிரதான அரசியல் கட்சிகளின் நியாயமான அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள் மற்றும் எதிர்க்கட்சியை குறிவைக்க அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசப்பட்ட வீடியோக்கள் குறித்து ஏன் போலீஸார் விசாரிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார். கோஷ், அபூர்வானந்த், ராகுல்ராய் ஆகியோர் டெல்லி கலவரத்தின் போது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை வழிநடத்தினார்கள், என்று மாணவிகள் கலிதா, நார்வால் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதுதவிர பிம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ராவன், சமூக ஆர்வலர் உமர் காலித், முன்னாள் எம்எல்ஏ மதின் அகமது, எம்எல்ஏ அமனத்துல்லா கான் உள்ளிட்ட பலரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.