தேவையான தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்பது உண்மை தான். இருப்பினும், மத்திய அரசு எந்தளவுக்கு முயற்சித்தும் போதுமான அளவுக்கு தர முடியாத நிலை தானே உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை, தமிழக அரசே எடுத்து நடத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வரும்படி, என்னையும், தென்னரசுவையும், தமிழக முதல்வர் டில்லிக்கு அனுப்பி வைத்தார். அதன்படியே மத்திய அமைச்சர்கள் இருவரையும் சந்தித்தோம். அப்போது, செங்கல்பட்டு நிறுவனம் குறித்து கோரிக்கை வைத்தோம். அதற்கு, ‘இது குறித்து முடிவெடுக்க, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என்றனர். இந்நிறுவனத்தை நடத்துவதற்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. குத்தகை அடிப்படையில் மத்திய அரசு இந்நிறுவனத்தை வழங்க வேண்டுமென, தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எல்லா விபரங்களையும் ஊடகங்களிடம் வெளிப்படையாக கூறிவிட முடியாது. பேச்சு நடக்கிறது. தமிழகத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை இப்போது கூட கேட்டுவிட்டுத் தான் வந்தோம். தமிழக அரசுக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு தந்து கொண்டு தான் இருக்கிறது; எந்த குறையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், மத்திய அமைச்சர்களின் பதில் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது: மத்திய அரசு ஒரு வாரம் அவகாசம் கேட்டு உள்ளது; பார்க்கலாம். செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பை துவக்கினால், ஆறு மாதத்திற்குள் இரண்டு கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் தயாரிக்கலாம். இருப்பினும், இந்த நிறுவனத்தை யார் எடுத்து நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்துக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை, மத்திய அரசிடம் கேட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.