பொதுவாக ஒவ்வொரு வருடமும் ரயில்வே நிதி நிலை அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை யின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்து இயக்குதல் போன்ற அறிவிப்புகள் பாராளு மன்றத்தில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் வெளியிடப்படும். மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தங்களுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியமாக இருக்கும் பல நடைமுறைகளை மாற்றி வருகிறது. பொது பட்ஜெட் என்றும் ரயில்வே பட்ஜெட் என்றும் தனித்தனியாக இருந்த இரண்டு பட்ஜெட்டு களையும் இணைத்து 2017-ம் ஆண்டு முதல் ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து புதிய ரயில்கள் அறிவிப்பு என்பது கானல்நீராகவே உள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி புதிய ரயில்கள் அறிவித்தல், ரயில்கள் நீட்டிப்பு செய்து இயக்குதல் எப்போது வேண்டு மானாலும் அறிவித்து இயக்கலாம் என்று உள்ளது. இதனால் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள், ஆளும்கட்சி எம்.பிகள், ஆளும்கட்சி அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான ரயில்களை நேரடியாக ரயில்வே அமைச்சரை சந்தித்து ரகசியமாக இதற்கான அறிவிப்பை பெற்று கொன்டு சாதித்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சி எம்.பிகள், எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து ரயில்வேத் துறையால் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. தற்போது புதிய ரயில்கள் எந்த பகுதி வழித்தடங்களில் எல்லாம் இயக்கப்பட்டது. எத்தனை ரயில்கள் இயக்கப்பட்டன எந்த தேதிகளில் இயக்கப்பட்டது போன்ற விபரங்கள் வெளிப்படைதன்மை இல்லாமல் பொதுமக்களுக்கு தெரியாத வண்ணம் அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. ஒருசில மாநிலங்கள் அல்லது ஒருசில பாராளுமன்ற தொகுதிகள் அதிக ரயில்கள் அறிவிப்பை பெற்றும் அதே நேரத்தில் தமிழகம் போன்ற மற்றொரு மாநிலம் அல்லது ஒருசில பாராளுமன்ற தொகுதிகள் எந்த ஒரு புதிய ரயில் அறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. இது மட்டு மில்லாமல் இவ்வாறு புதிய ரயில்கள் அறிவிப்பை பற்றி மற்ற பகுதிகளுக்கு யாருக்குமே ஒன்றுமே தெரிவதில்லை. ஒரு மாநிலத்தில் ஓர் புதிய ரயில் இயக்கப் பட்டால் அந்த பகுதியில் உள்ள பத்திரிகைகளில் மட்டும் செய்திகள் வெளியா கின்றன. ஏ.காட்டாக கூறவேண்டுமானால் சென்னையிலிருந்து ஹ{ப்ளிக்கு வாரம் இருமுறை புதிய ரயில் கடந்த வாரம் புதிதாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது. இது குறித்து சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற பகுதி மக்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.
ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றம் சென்றால் மத்திய அரசு சம்மந்தமாக பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு மக்களுக்கு ஏதாவது செய்ததாக தெரியவேண்டும் என்றால் ரயில்வேத்துறை மூலமாக மட்டுமே முடியும். மற்ற அனைத்து துறைகளிலும் (விமானத்துறை, இரானுவதுறை, வெளி உறவுதுறை, பெட்ரோலியதுறை, மின்சாரத்துறை.) பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு கிடையாது. ஏதாவது துறைகளில் ஓர் திட்டம் கொண்டுவந்தாலும் கூட மாநில அரசு வழியாகத்தான் நிறைவேற்ற முடியும். இது மட்டுமில்லாமல் மற்ற அனைத்து துறைகளிலும் திட்டங்கள் எல்லாம் பெரிய திட்டங்களாக இருப்பதால் ஒரு திட்டம் நிறைவேற சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். இந்த கால கட்டத்தில் பல பாராளுமன்ற தேர்தலை சந்தித்து பல உறுப்பினர்கள் வந்து சென்றி ருப்பார்கள். ஆனால் ரயில்வேத்துறையில் புதிய ரயில்கள் இயக்குவது, ரயில் களுக்கு நிறுத்தம் வாங்குவது, ரயில் நிலையங்களில் மேட்பாட்டு பணிகள் செய்வது, என ரயில்வேத்துறை சார்ந்த மேம்பாட்டு பணிகள் செய்யும் போது அதன் பலன் உடனடியாக பொதுமக்கள் அனுபவிப்பார்கள். இதனால் நமது பாராளுமன்ற உறுப்பினர் இதை ரயிலை இயக்கினார், இந்த ரயிலுக்கு நிறுத்தத்தை வாங்கி கொடுத்தார் என்று மாறுதட்டி சொல்ல முடியும். இது மக்களிடம் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி தேர்தலில் ஜெயிக்க உதவும். இதனால்தான் கேரளாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில்வேத்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னாரின் முயற்சி யால் குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக ஒருசில ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
1. திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு
2. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் டவுண் வழியாக காந்திதாமுக்கு ஹம்சாபர் வாராந்திர ரயில்
3. திருநெல்வேலி – தாம்பரம் அந்தோதையா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு
4. நாகர்கோவில் – தாம்பரம் வாரம் மூன்று முறை இரவுநேர ரயில் சேவை
கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு ரயில்கள் குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவுக்கு அதிக ரயில்கள்:-
மோடி இரண்டாவது அமைச்சரவையில் கர்நாடகாவை சார்ந்த சுரேஷ் அங்காடி சன்னபாசப்பா ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இவர் பொறுப்பேற்றது முதல் கர்நாடகாவிற்கு பல்வேறு புதிய ரயில்கள் அறிவிப்பை தொடர்ந்து அறிவித்து வருகின்றார். பல்காவி – பெங்களுர் ரயில், கோவா – பல்காவி ரயில், ஹ{ப்ளி – சென்னை வாரம் இருமுறை ரயில் ஆகிய ரயில்கள் புதிதாக விடப் பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் மேலும் பல்வேறு புதிய ரயில்கள் கர்நாடகா விற்கு வர இருக்கின்றது. இதைப்போல் ஆந்திரா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு புதிய ரயில் கூட புதிதாக அறிவிக்கப்படவில்லை.
சாதிக்கும் கேரளம்:
கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் கேரளம் ஜொலித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை பெற்று வந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கேரளாவிலிருந்து தேர்வாகாத பாரதியஜனதா ஆட்சியிலும் ஐந்து ஆண்டுகள் இது தொடர்ந்து கொண்டே வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. கேரளா பயணிகள் வசதிக்காக கொச்சுவேலியிருந்து எர்ணாகுளம், கோவை வழியாக பெங்களுர் அருகில் உள்ள பனஸ்வாடிக்கு வாரத்துக்கு இரண்டு நாள் செல்லும் வகையில் ஹம்சபார் ரயில் கடைசியாக புதிதாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் ரயில் ஆகும். இதற்கு முன்னர் கொச்சுவேலி – மங்களுர் அந்தோதையா வாரம் இருமுறை ரயில், திருவனந்தபுரம் -நிலாம்பூர், மதுரை அமிர்தா ரயில் தனிதனி ரயில்களாக இயக்கம் போன்ற ரயில்கள் கடந்த ஆறு மாங்களில் புதிதாக இயக்கப்பட்ட ரயில்கள் ஆகும்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் மாற்றம்:-
தெற்கு ரயில்வே பொது மேலாளராக இருந்த ராகுல் ஜெயின் மாற்றப்பட்டு புதிதாக கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தை சார்ந்த ஜாண்தாமஸ் ஜுலை 19-ம் தேதி பொறுப்பேற்றுள்ளார். இவர்பொறுப்பேற்ற உடன் கேரளாவில் புதிய ரயில்கள் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டள்ளார். இதன்படி முதல் ரயிலாக கேரளா வில் இயங்கிகொண்டிருந்த கொச்சுவேலி – பெங்களுர் ரயிலை மைசூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி இந்த ரயிலின் துவக்கவிழா சிறப்பு ரயில் 26-ம் தேதி மைசூரில் வைத்து துவக்கிவைக்கப்படுகிறது. இதைஅடுத்து கேரளாவுக்கு பல்வேறு புதிய ரயில்கள் அறிவிப்புகள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவிற்கு புதிய ரயில்கள் விடப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த பட்டியிலில் கேரளாவும் இணைந்துள்ளது. தமிழகத்துக்கு புதிய ரயில்கள் இயக்க யாருமே இல்லாமல் அனாதையாக உள்ளது. தமிழக பாராளுமன்ற உறுப்பினர் களும் தங்கள் தொகுதி கோரிக்கைகளை நேரடியாக ரயில்வே அமைச்சரிடம் சென்று சமர்ப்பித்தனர். இது மட்டுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பனர்கள் கொண்டு தெற்கு ரயில்வே பொது மேலாளர் நடத்திய வளர்ச்சி கூட்டத்திலும் கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். ஆனால் தமிழக பயணிகள் பயன்படும்படியாக புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் தமிழக பயணிகள் ஏமாற்றமாகவே உள்ளனர்.