கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 கோடி புதிதாகக் கடன் வாங்கு வதற்கு, இந்த 2021-22 வரவு- செலவுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. வேளாண், தீயணைப்புத் துறை, மின்சாரப்பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக பேரவையில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், இன்னொரு பக்கம் அரசின் கடன் தொகை அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது மக்களை ஏமாற்றும் செயலாகும். கடன் தொகை அதிகரித் திருப்பதாக கூறும் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிதியை வைத்து அவர் குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவார் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். முதல்வரின் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 18 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கி யிருப்பது, நெடுஞ்சாலை துறைக்காக அல்லது வரும் சட்டமன்ற தேர்தல் செலவுக்காக என்ற பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அதன் மாநில வரியை குறைக்க எந்த விதமான அறிவிப்பை செய்யவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயிலிருந்து மாநிலத்திற்கு உரிய பங்கு கிடைப்பது இல்லை என்று வருத்தப்படும் ஓ.பன்னீர்செல்வம், பாஜக அரசுடன் கைகோர்த்து செயல்படுவது வெட்கமற்றது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. ஆதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியான ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடிக்கு நிதிநிலை அறிக்கை ரூபாய் 5,000 கோடி மட்டுமே நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், மீதமுள்ள ரூ.7000 கோடி கடனை யார் செலுத்துவார்கள் என்பதை ஒ.பன்னீர் செல்வம் விளக்கமளிக்க வேண்டும். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கும், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள், அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் இல்லை என்பது வேதனையாது. 90 இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. எனவே, இந்த தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் என்பது ஒட்டு மொத்தத்தில் மக்களுக்கு ஒன்றுமில்லை என்பதை தான் வெளிப்படுத்தியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது. இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.