நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக் குரியது. அதேநேரத்தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய மருத்துவர் தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டதைப் போலில்லாது, ‘தமிழ்நாடு’ என்பதற்குத் தற்போது வழங்கப்படும் “Tamil nadu” என்பதனையும், தமிழ் உச்சரிப்பில் “Thamizh Naadu” என மாற்ற வேண்டும். தமிழ்நாடு எனும் பெயரை அதே மாதிரி உச்சரித்து, தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது. மேலும், தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆரியமயமாக்கலை முறியடித்து அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதும் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. சான்றாக, வேதாரண்யமாக்கப்பட்ட திருமறைக்காடு, விருத்தாசலமாக்கப்பட்ட திருமுதுகுன்றம், ஸ்ரீமுஷ்ணமாக்கப்பட்ட திருமுட்டம் போன்று தமிழகத்தின் எண்ணற்ற ஊர்ப் பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளன. அவை யாவற்றையும் மீண்டும் தொல்தமிழ்ப்பெயர்களுக்கே மாற்றி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே தமிழ் மீட்சியை நிலைநாட்டிட முடியும். அவ்வாறு செய்வதன் மூலமே தமிழக அரசு உண்மையிலேயே தாய்த்தமிழ் மொழி வளர்ச்சியில் உளமாற அக்கறை கொண்டுள்ளது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகில் நிறுவும் பெருஞ்சான்றாக அமையுமென்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். ஆகவே, பிறமொழியிலுள்ள ஆரியமயமாக்கப்பட்ட தமிழக ஊர்ப்பெயர்களை நல்ல தமிழில் மாற்றி அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.