தமிழக – கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி அருகே தமிழ் பதாகைகளை அடித்து உடைத்து கன்னடர்கள் சேதப்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. தாளவாடி உள்பட கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில், தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த எல்லை பதாகைகளை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர், தமிழில் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டதை கண்டித்து முழுக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த கன்னடர் அமைப்பினரின் அடாவடித்தனத்தால், ராமபுரம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகத்தில் வன்முறைகள் தலைவிரித்தாடின. அந்த வன்முறையில், தமிழர்களின் உணவகங்கள், உடைமைகள், தமிழ் பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவர் அரை நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கன்னட அமைப்பினர்களால் தாக்கப்பட்டார். இதனை முன்னின்று நடத்திய வாட்டாள் நாகராஜ், தன்னுடைய விஷ கருத்துக்களால் கன்னட மக்களையும், வன்முறைக்கு தூண்டிவிட்டவர். அதுமட்டுமின்றி, தமிழர்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடையாது, சிறுநீர் வேண்டுமானால் தருகிறோம் என பேசியவர் இந்த வாட்டாள் நாகராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கன்னட அமைப்பினர், தமிழர்கள் வைத்திருந்த பதாகைகளும், கருப்புக்கொடியையும் கிழித்து எரிந்தனர். அதுமட்டுமின்றி, தமிழில் பதாகைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்பினர் மீது கர்நாடகா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாநிலத்தில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசு மெத்தனப் போக்கு காட்டும் பட்சத்தில், நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நினைவுப்படுத்துகிறேன். இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.