வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களான பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அரசு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, அறிவுரைகள் வழங்கி வருகிறார். பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திட, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை இராணுவப் படையினர் ஒருங்கிணைந்து, முக்கிய மக்கள் கூடும், வசிப்பிட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு (Police Flag March) நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 18.03.2021 அன்று காலை R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் துணை இராணுவப் படையினருடன் காவல் கொடி அணிவகுப்பு, பி.டி.ராஜன் சாலையில் ஆரம்பித்து காமராஜர் சாலை, விஜயராகவபுரம், ராமசாமி சாலை வழியாக சிவன் பூங்கா வரை சென்று நிறைவுபெற்றது. மேலும், ஆவடி சரக உதவி ஆணையாளர் சத்தியமூர்த்தி தலைமையில், ஆவடி சரக ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் துணை இராணுவப்படையினருடன் 18.3.2021 அன்று காலை, காவல் கொடி அணிவகுப்பு ஆவடி பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில் தொடங்கி, திருவள்ளூர் சாலை சோதனைச்சாவடி வழியாக, ஆவடி நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.