மே 17, 2019 அன்று ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்ட மசோதாவின் 2 வது வாசிப்பு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், ஒவ்வொரு ஆண்டும், மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஏழு நாள் காலம் தமிழ் இனப் படுகொலை கல்வி வாரமாக அறிவிக்கப்படும். அந்த காலகட்டத்தில், அனைத்து ஒன்ராரியோ மக்களும் தமிழ் கனடியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பு கிடைக்கும். இந்த சட்ட மசோதா உயிரிழந்த மக்களிற்கான மரியாதையை வழங்குவது மட்டுமல்லாமல், வாழ்வு முழுவதும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களுக்கான ஒரு நம்பிக்கையை கொடுத்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றது.
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிப்பதன் மூலம், மனித இனத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப் படுகொலைகள் குறித்த விழிப்புணர்வைப் பேணுவதோடு, இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான எங்கள் கூட்டு முயற்சியையையும் உறுதிப்படுத்துகின்றது. இந்தச் சட்டம் மூன்றாவது வாசிப்பு முடிவடைந்து அரச ஒப்புதல் பெறும் நாளில் நடைமுறைக்கு வருகிறது. மசோதா 104 மூன்றாவது வாசிப்பில் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இந்த மசோதாவை மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்தியபோது, நாம் அனைவரும் இணைந்து சமூகமாக மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள், மற்றும் கட்சி உறுப்பினர்களை ஆதரவாக ஒன்று திரட்டியிருந்தோம். இந்த ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியில் கனேடியத் தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் கனேடியத் தமிழ் இளையோர் (CTYA) அமைப்பு ஒருங்கிணைத்து இந்த வேலத்திட்டத்தை வழிநடத்தியது. எங்கள் தொடர்ச்சியான கூட்டு முயற்சியில் பல அமைப்புகள் பங்கேற்றன. மேலும் பல தனிநபர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
கனடிய தமிழர் தேசிய அவை மற்றும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை அயராது உழைத்து, இறுதியும் மூன்றாவது வாசிப்பிற்கான ஆதரவு தேடலில் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றன. அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைவர் Doug Ford அவர்கள் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் கனடியத் தமிழர் இளையோர் அமைப்பு (CTYA) உறுப்பினர்களுடனான சந்திப்பில், மசோதா 104 இற்கான தனது முழுமையான ஆதரவை மீண்டும் வலியுறுத்தி இருந்தார். இந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சிகளில் தன்னார்வலர்களை எம்முடன் இணைந்து செயற்பட வேண்டிக் கொள்கிறோம்.
இனப்படுகொலையாளிகள், இனப்படுகொலையை மறுப்பவர்கள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி நிற்பவர்களிடம் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்பை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த மசோதா என்பது ஒன்ராறியோ அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் எமது சமூகத்தினதும் ஒரு கூட்டு முயற்சியாகும். ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதாவை எங்கள் பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் நிறைவேற்றி வைப்பார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.