சமகாலத் தமிழக வரலாற்றில் சரித்திரச் சுவடுகளைப் பதித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கால் நூற்றாண்டு களப்பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடி வைக்கிறது. ஏக இறைவனின் பேரருள் இந்த இயக்கத்திற்கு எல்லாக் காலங்களிலும், களங்களிலும் துணை நின்றுள்ளது. இதற்காக இறைவனின் அருள் நினைத்து இவ்வியக்கம் நன்றி பாராட்டுகிறது. எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், இறை திருப்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு இவ்வியக்கத்திற்காகத் தங்களின் உன்னத உழைப்பை அர்ப்பணித்துள்ள அடிப்படைத் தொண்டர்களுக்கும், தொண்டர்களின் தொண்டர்களாய்ப் பணியாற்றிய கழகத்தின் அனைத்து நிலையான நிர்வாகிகளுக்கும் இந்த இயக்கம் நன்றி நவில்கிறது. கடுமையான காலங்களை தமுமுக கடந்துவந்த போது ஆதரவாகவும், ஆறுதலாகவும் தோள் கொடுத்துத் துணைநின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமைப் போராளிகள், அறிவார்ந்த சான்றோர்கள், இயக்கத்தின் செய்திகளையும், போராட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த நேர்மைமிகு ஊடகவியலாளர்கள், சட்ட ஆலோசகர்கள் ஆகியோருக்கு இந்த வெள்ளி விழா ஆண்டில் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
அளப்பரிய அன்போடு இந்த இயக்கத்திற்கு நன்கொடைகளை வாரி வாரி வழங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, அவர்கள் நற்பணிகளுக்காக வழங்கிய நன்கொடைகளை இறைவன் பன்மடங்காக்கி இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்ற பிரார்த்தனையையும் முன் வைக்கிறோம். இயக்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்ட தொண்டர்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவையான நேரங்களைத் தரமுடியாத நிலையில், அதைப் பொறுத்துக் கொண்டு சமுதாயப் பணியில் ஈடுபடும் ஆண்களுக்குப் பின்புலமாய் இருந்த குடும்பத்துப் பெண்மணிகளுக்கும் இவ்வியக்கம் நன்றி தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கையும், நேசமும் கொண்டு தோள் கொடுத்துத் துணை நிற்கும் தொப்புள் கொடி உறவுகளான அனைத்து சமுதாய சொந்தங்களுக்கும், களங்களில் தமுமுகவோடு இணைந்து நின்று போராடி, நியாயங்களுக்காக என்றும் குரல் கொடுக்கும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தோழமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தமுமுக தெரிவிக்கிறது. தொடரும் இந்த நெடிய பயணத்தில், என்றென்றும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒத்துழைப்பையும், உற்சாகத்தையும் தமுமுக விழைகிறது. அன்பு நிறைந்த உறவுகள் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நன்றிகளை இந்த வெள்ளிவிழா ஆண்டில் தெரிவித்து மகிழ்கிறோம். இவ்வாறு பொதுச் செயலாளர் பொறுப்பிருக்கும் ஜெ. ஹாஜா கனி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.