தமிழ்நாட்டின் உணவு சாராயமாகிட்டதென தலைகுனிவதாக கூறுகிறார் கவிஞர் வைரமுத்து

சென்னையின் முக்கியமான இலக்கிய அடையாளங்களின் ஒன்றான, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையம், 50 நாள் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துள்ளது. கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் ஏற்பட்டுள்ள புத்தக விற்பனை மற்றும் அதுசார்ந்த சோர்விலிருந்து வாசகர்களை மீட்டெடுக்கும் விதமாகவும், 2021ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் துவங்கு வதற்கான ஒரு வரவேற்ப்பு விழாவாகவும் இந்த புத்தகக் காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர், பதிப்பாளர் வேடியப்பன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்புப் புத்தகக் காட்சியை கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கி வைத்துள்ளார். தன் எழுத்தால் உயர்ந்தவர், காலம்காலமாக பிரிக்க முடியாத வறுமையும் புலமையும் என்ற வகைப்பாட்டை, உடைத்து கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் தமிழின் நம்பிக்கைக்குரிய தலைமகன் கவிப்பேரரசு வைரமுத்து இந்த புத்தகக் காட்சியை திறந்து வைப்பது மிகவும் பொருத்தமானது. புத்தகக் காட்சி திறப்பு விழாவில்…ஊடகச் சந்திப்பில்… பேசிய கவிப்பேரரசு வைரமுத்து,

*ஓர் இனத்தின்
முதல் தேவை – உணவுத் தேவை.
இரண்டாம் தேவை – அறிவுத் தேவை *
ஆனால், தமிழ்நாட்டின்
இரண்டாம் தேவை
சாராயமாகிவிட்டதே
என்று தலைகுனிகிறேன்* என்றார்.

இவ்விழாவிற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர்கள் எமரால்ட் பதிப்பகம் ஒளிவண்ணன் மற்றும் பாரதி புத்தகாலயம் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். பபாசியின் முன்னாள் செயலாளர்கள், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக உரிமையாளர் புகழேந்தி மற்றும் யுனிவர்செல் பப்ளிஷர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களுடன், கிட்டத்தட்ட முப்பதாயிரம் தலைப்புகளுடன் இப்புத்தகக் காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சென்னையில், கலைஞர் கருணாநிதி நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலேயே, தரைத்தளத்தில் இப்புத்தகக் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணிமுதல், இரவு 9 மணிவரை நடைபெறும் இக் கண்காட்சியில் ஒவ்வொரு வாரத்தின் கடைசிநாட்களிலும் எழுத்தாளர் வாசகர்கள் சந்திப்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு: நிகில்.